திங்கள், 19 ஆகஸ்ட், 2019

ஏழை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கொடுத்து உதவும் நல்ல உள்ளம்...! August 18, 2019

Image
சண்டிகரை சேர்ந்த ஒருவர், ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவக்கூடிய பாடப்புத்தகங்களை கொடுத்து உதவி வருவது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
சண்டிகரை சேர்ந்த சந்தீப் குமார் என்பவர், Open Eye Foundation என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களை சேகரித்து, அதனை ஏழை மாணவர்களுக்கு கொடுத்து உதவி வருகிறார்.
அந்த அறக்கட்டளையில் இருக்கும் ஏராளமானோர் பல கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் அலைந்து பழைய புத்தகங்களை சேகரித்து அதனை ஏழை மாணவர்களுக்கு விநியோகிக்கின்றனர்.
ஆசிரியர் பயிற்சியை முடித்த சந்தீப் குமார், சண்டிகருக்கு குடிபெயர்ந்த சமயத்தில் அங்கு பல ஏழை மாணவர்கள் புத்தகங்கள் வாங்க பணம் இல்லாமல் அவதிப்படுவதை அறிந்து, இதுபோன்ற சேவை முயற்சியில் இறங்கியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
மேலும், கூடிய விரைவில் அவரது அறக்கட்டளை சார்பாக 200 ஏழைக் குழந்தைகளை தத்தெடுக்கப் போவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். தனி ஒருவராக, ஒரு அறக்கட்டளையை நிறுவி, தற்போது பல ஏழை மாணவர்களுக்கு உதவி வரும் சந்தீப் குமாருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

credit ns7.tv