credit ns7.tv
காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டன.
ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை:
அனைத்து வழக்குகளை இன்று விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சட்டப்பிரிவு 370-க்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள தனது பெற்றோரை பார்க்க தனக்கு அனுமதி வழங்கக் கோரி, வழக்கறிஞர் முகம்மது அலீம் சையத் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர், தனது பெற்றோரைப் பார்க்க அனுமதி அளித்தது. மேலும், அவருக்கு மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டது.
மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு:
இதேபோல், சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள தனது கட்சி நிர்வாகி யூசுப் தாரிகாமியை சந்திக்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டது. மேலும், அரசியல் நோக்கம் கொண்டதாக இந்த சந்திப்பு இருக்கக் கூடாது என்றும் யெச்சூரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் அமலில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கவும், தொலைபேசி, இணைய சேவை உள்ளிட்ட தொலைத் தொடர்பு வசதிகளை அளிக்கவும் உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மற்றொரு மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.