credit ns7.tv
பொருளாதார மந்த நிலை...சமீப காலமாய் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ள வார்த்தை இது...
பொருளாதார மந்த நிலை என்றால் என்ன?
ஒருவர் பல் துலக்க பயன்படுத்தும் ஒரு பேஸ்ட் டியூப்பை மாதத்தில் 25 நாட்கள் பயன்படுத்தி விட்டு, மீதமிருந்தாலும் அதை தூக்கிப்போட்டு விட்டு, புதிதாக ஒரு பேஸ்ட்டை வாங்கினால் கூடுதலாக ஒரு பொருள் விற்கும். அதுவே அந்த பேஸ்ட் தீரும் வரை அழுத்தி அழுத்தி, பயன்படுத்தினால், 35 நாட்கள் வரை பயன்படுத்துவார். இதனால் அவர் புதிதாக வாங்கும் பேஸ்ட் கடையில் தேங்கி நிற்கும்.
இதையே சந்தை முழுவதும் விரிவுப்படுத்தி பார்த்தால், தனி நபர் வருமான குறைவு, நுகர்வு குறைவு, பொருட்கள் தேக்கம், குறைக்கப்படும் உற்பத்தி, மூடப்படும் ஆலைகள் என பொருளாதார மந்த நிலையை விளக்க முடியும்.
இந்த மந்த நிலையை மாற்றிவிட, மக்களின் கைகளில் பணத்தின் புழக்கத்தை அதிகரிக்க திட்டமிடுகிறது மத்திய அரசு. LIQUIDITY என ஆங்கிலத்தில் சொல்லப்படும் பணப்புழக்கம் மக்களிடம் குறையும்போது, பொருளாதார மந்த நிலை ஏற்படுகிறது. இந்த தேக்கத்தை போக்கவே ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
பண புழக்கத்தை அதிகரிக்க, மத்திய அரசு எடுக்கும் முயற்சிகள்:
* ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்படும் நிதியில் இருந்து பொதுத்துறை வங்கிகளுக்கு மறு மூலதன நிதி 70 ஆயிரம் கோடி ரூபாயை
வழங்குதல்.
வழங்குதல்.
☛வீட்டு கடன் வழங்கும் வங்கிகளுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தருவது.
☛மத்திய அரசு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாக்கி 60 ஆயிரம் கோடியை விடுவிப்பது .
☛ஜிஎஸ்டி பாக்கியை உடனடியாக திரும்ப தருதல்.
☛வங்கிகளுக்கான ரெப்போ விகித குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வங்கிகளுக்கு அழுத்தம் கொடுப்பது.
இது போன்ற சீர்த்திருத்தங்கள் விரைந்து பலன் தரும் என்று பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.
சமீபத்தில் சீர்திருத்த அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட பண புழக்கத்தை அதிகரிப்பது குறித்தே அதிகம் பேசினார். ஆனால் யானை பசிக்கு சோளை பொறியாக இந்த நடவடிக்கை மாறிவிடக் கூடாது என்கிற அச்சமும் சந்தையில் உள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலத்தை மனதில் வைத்து வேறு சில அறிவிப்புகளையும் வரும் நாட்களில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் சந்தையில் நிலவி வருகிறது. நிதி மூலதனத்தை பலப்படுத்துவது என்கிற அம்சம் ஓரளவு தீர்வு தந்தாலும், அது நீண்ட கால பலன் தர வேறு சில நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்கிற வாதமும் மறுப்பதற்கில்லை.