கொரோனா வைரஸின் திரிபு என கருதப்படும் D614G வகை தொற்று மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹானில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதில் இருந்து நாம் மீண்டு வர இன்னும் சில காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில் அதற்குள் மேலும் ஒரு புதிய வகை பாதிப்பு அதிகம் பரவ ஆரம்பித்துள்ளது.
கொரோனா வைரஸின் திரிபு D614G:
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மலேசியா சென்ற உணவக உரிமையாளர் ஒருவருக்கு புதிய வகை பாதிப்பு கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் திரிபான இது D614G என கூறப்படுகிறது. இது கொரோனா வைரஸை விட பத்து மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வகை பாதிப்பு முதன்முதலாக கடந்த பிப்ரவரி மாதம் ஐரோப்பாவில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு மேலும் சில நாடுகளுக்கும் பரவியது. மலேசியாவில் இந்த வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர், 14 நாட்கள் தனிமைப்படுத்தும் உத்தரவை மீறி வெளியே சென்றதால், சுமார் 45 பேருக்கு இந்த தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விதிமுறையை மீறிய ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதிக பாதிப்பை ஏற்படுத்தும் D614G:
கொரோனா வைரஸ் உலகிற்கு புதியது என்பதால், அதன் செயல்பாடுகள் தொடர்பாக அறிந்து கொள்வது சிரமமாக உள்ளது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. SARS-CoV-2 என்ற கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டதில் இருந்து பல்வேறு வகைகளில் மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் D614G என்ற இந்த திரிபு மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.
உலக நாடுகளில் பரவல்:
கடந்த ஜூலை மாதம் பிசிசி வெளியிட்ட அறிக்கையின்படி, உலகெங்கிலும் 97% மாதிரிகளில் இந்த கொரோனா வைரஸ் திரிபு காணப்படுவதாக கூறுகின்றனர். சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த திரிபு வகை காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து வைரஸ்களும் அதன் உண்மையான அமைப்பில் இருந்து படிப்படியாக மாறுபாடு அடையும். அதில் சில மாறுபாடுகள் மனித உயிரணுக்களில் மிக எளிதாகவும், வேகமாகவும் நுழையும். மனித உயிரணுக்களில் நுழைவதற்காக வைரஸ்கள் பயன்படுத்தும் ஸ்பைக் புரதத்தின் மாறுபாடுகள், அவை மிக தீவிரமாக செயல்பட உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவிக்கின்றன. அப்படி தான், கொரோனாவின் இந்த திரிபும் பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில், இதுபோன்ற வைரஸ் திரிபுகள் அதில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்தது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே தொடக்கம் முதல் ஆய்வுகள் நடந்து வருவதால், தடுப்பூசி விவகாரத்தில் எந்த தாக்கமும் இருக்காது என்கின்றனர்.
மக்கள் அனைவரும் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியம். D614G பரவல் அதிகரித்து விட்டால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்ந்துள்ளது.