வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

தேசிய கொடியின் வரலாறு

 ஜூலை 22ம் தேதி, 1947ம் ஆண்டு, இந்திய அரசியல் சாசன சபையினரின் கூட்டம் அரசியல் சாசன சபையில் நடைபெற்றது. அன்றைய ஆலோசனை கூட்டத்தில் முதன்மையாக ஜவஹர்லால் நேருவால் பேசப்பட்டது சுதந்திர இந்தியாவிற்கான தேசிய கொடியை முடிவு செய்வது பற்றியது.  இந்திய தேசிய கொடி சம அளவுள்ள அடர் காவி, வெள்ளை மற்றும் அடர்பச்சை ஆகிய மூன்று நிறங்களால் அமைக்கப்படும் என்றும் அதன் வெள்ளைப் பக்கத்தில் நீல நிறத்தில், சார்நாத்தில் அமையப் பெற்றிருக்கும் அசோகர் தூணில் பொறிக்கப்பட்டுள்ள சக்கரம் பயன்படுத்தப்படும் (ராட்டை மாற்றப்பட்டு அசோக சக்கரம் நிலைப் பெற்றது) என்று அறிவிக்கப்பட்டது.  கொடியை பற்றிய பல்வேறு முக்கிய அம்சங்கள் பேசப்பட்டு, இறுதியாக இந்தியாவின் தேசிய கொடி ஆகஸ்ட் 16ம் தேதி, 1947ம் ஆண்டு செங்கோட்டையில் ஏற்றப்பட்டது.

இந்தியாவின் முதல் தேசிய கொடி

இந்தியாவின் முதல் தேசியக்கொடியை ஐயர்லாந்தை பிறப்பிடமாக கொண்ட சகோதரி நிவேதா (விவேகானந்தரின் சிஷ்யை) 1904 – 06க்கு இடைப்பட்ட காலத்தில் வடிவமைத்தார். இந்தியாவின் முதல் தேசிய கொடி என்று இது அழைக்கப்படுகிறது. அந்த தேசிய கொடி ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி 1906ம் ஆண்டு கொல்கத்தாவில் இருக்கும் பார்சி பகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற மூன்று வர்ணங்களில் உருவாக்கப்பட்ட கொடியின் மையத்தில் வந்தே மாதரம் என்று இந்தியில் பொறிக்கப்பட்டிருந்து. சுதந்திர போராட்ட தியாகிகள் சச்சிந்திர பிரசாத் போஸ் மற்றும் ஹேம் சந்திரா கனுங்கோ ஆகியோர் அந்த கொடியை வடிவமைத்ததாக கூறப்படுகிறது. பச்சை நிறப்பகுதியில் 8 மலரும் தாமரைகளும், சிவப்பு நிற பகுதியில் சூரியனும் பிறையும் இருப்பது போல் அவை வடிவமைக்கப்பட்டது.

அதற்கு அடுத்த ஆண்டு, 1907-ல், மேடம் காமா மற்றும் நாடுகடத்தப்பட்ட புரட்சிக்காரர்கள் குழு ஒன்று இந்திய தேசிய கொடியை ஜெர்மனியில் ஏற்றினர். இந்திய தேசிய கொடி வெளிநாட்டில் ஏற்றப்பட்டது இது தான் முதல் முறை. 1917ம் ஆண்டு அன்னி பெசண்ட் மற்றும் லோக்மான்யா திலக் ஆகியோர் சுதந்திர போராட்ட இயக்கத்தின் ஒரு பங்காக தேசிய கொடியை உருவாக்கினார்கள். அதில் மூன்று வர்ணங்களுக்கு பதிலாக 9 இரட்டை வர்ண கோடுகள் (5 சிவப்பு, 4 பச்சை) கொண்டு, சப்தரிஷி வடிவமைப்பில் 7 நட்சத்திரங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. ஒரு வெள்ளை பிறையும் நட்சத்திரமும் வலது பக்க முனையில் பொறிக்கப்பட்டிருந்தது.

இன்று பயன்படுத்தப்படும் தேசிய கொடியின் வரலாறு

பிங்கலி வெங்கையா என்ற சுதந்திர போராட்ட தியாகி தான் இன்று நாம் பயன்படுத்தும் தேசிய கொடியை உருவாக்கியவர் என்று நம்பப்படுகிறது. தென் அமெரிக்காவில், இரண்டாவது ஆங்கிலோ – போர் போராட்டத்தின் போது மகாத்மா காந்தியை சந்தித்து பேசியுள்ளார். பல ஆண்டுகள் இந்திய தேசிய கொடிக்கான ஆராய்ச்சியை அவர் மேற்கொண்டுள்ளார். அது தொடர்பாக புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் பிங்கலி. அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் 1921ம் ஆண்டு பெஸ்வாடாவில் நடைபெற்ற போது, பிங்கலி மீண்டும் காந்தியை சந்தித்து தேசிய கொடியின் அடிப்படை வடிவமைப்பு குறித்து பேசியுள்ளார். அதில் சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் மட்டும் வைத்து இவை இந்தியாவின் இரண்டு பெரிய மதங்களை குறிப்பதாக கூறியிருந்தார். ஆனால் காந்தி இரண்டிற்கும் நடுவே வெள்ளை நிறம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அது அமைதி மற்றும் இந்தியாவில் இருக்கும் இதர குழுவை குறிப்பிடும் வகையில் அமைய வேண்டும் என்று கூறினார். மேலும் அதன் மையத்தில் ராட்டை வைக்கப்பட்டு இந்தியாவின் வளர்ச்சியை அது குறிக்க வேண்டும் என்றும் கூறினார்.

பல்வேறு முக்கிய மாற்றங்கள் அதற்கு அடுத்த 10 வருடங்கள் நம் நாட்டு தேசிய கொடியின் வடிவமைப்பில் கொண்டுவரப்பட்டது. 1931ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மூவர்ண கொடி நம் நாட்டின் தேசிய கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் சிவப்பு நிறம் காவியாக மாற்றப்பட்டது. மேலும் தேசிய கொடிக்கும் இந்தியாவில் இருக்கும் மதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாத வகையில் நிறங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

கொடியை உருவாக்கியது யார்? இன்று வரை நிலவும் சர்ச்சை

2013ம் ஆண்டு, வரலாற்று ஆசிரியர் பண்டுரங்க ரெட்டி இந்தியாவின் தேசிய கொடி ஹைதராபாத்தை சேர்ந்த சுரையா தியாப்ஜியால் உருவாக்கப்பட்டது என்று கூறினார். இந்திய அரசியல் சாசன சபையின் தீர்மானத்தில் பெயர்கள் குறிப்பிடப்படாததால் அது சர்ச்சைக்கு வழி வகுத்தது. மேலும் ராட்டைக்கு பதிலாக அசோக சக்கரத்தை நிறுவும் யோசனையை யார் கொடுத்தது என்பதிலும் இதுவரை சரியான தெளிவில்லை. ஆனால் 2018ம் ஆண்டு என்.ஜி.ஓ. தஸ்த்கர் என்ற அமைப்பை உருவாக்கிய லைலா தியாப்ஜி என்பவர் தன்னுடைய “How the Tricolour and Lion Emblem Really Came to Be” என்ற கட்டுரையில் தன்னுடைய பெற்றோர்கள் பத்ருதீன் மற்றும் சுரையா தியாப்ஜி தான் இந்த மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஃப்ளாக் பவுண்டேசன் ஆஃப் இந்தியா (Flag Foundation of India) என்ற லாபகர நோக்கமற்ற அமைப்பை நடத்தி வரும் தொழில் அதிபர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நவீன் ஜிண்டால், இந்நாட்டின் தேசிய கொடியின் வடிவமைப்பை சமர்ப்பித்தவர் திருமதி. சூரையா பத்ர்-உத்-தின் தியாபி என்றும், அந்த வடிவமைப்பை தேசிய கொடி குழு 1947ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி ஏற்றுக் கொண்டது என்றும் கூறியுள்ளார். அவருடைய கணவர் அரசியல் சாசன சபையில் செயலகத்தில் துணை செயலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1963ம் ஆண்டு உயிரிழந்த வெங்கையாவிற்கு 2009ம் ஆண்டு தபால் தலை வெளியிட்டு கௌரவித்தது இந்திய அரசு. மேலும் 2014ம் ஆண்டில் அவருடைய பெயர் பாரத் ரத்னாவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.