தமிழர்களின் பண்டைய கால வரலாற்றை உலக அரங்கிற்கு எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கிறது தமிழகத்தில் நடைபெறும் அகழாய்வுப் பணிகள்.
இந்த அகழாய்வுகளின் முடிவில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள், நம் பழமையான நாகரீகம் குறித்த சாட்சியாக அமைந்திருக்கிறது. மன்னுள் புதைந்துள்ள நமது தமிழர் பண்பாட்டு வேரின் ஆழம் தேடி பயணித்ததில் பிரம்மிப்புகள் பல காத்திருந்தன. அந்த வகையில், அகழாய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் கிடைத்திருக்கும் தொல் பொருட்களின் விவரங்களை தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாட்டம் கொடுமணல் ஆகிய 7 இடங்களில் ஒரே நேரத்தில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த அகழாய்வு பணிகள் அனைத்துமே வரும் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெறும் தொல்லியல் அகழாய்வுகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் கள ஆய்வுகளின் மூலம் மொத்தமாக 3,959 தொல் பொருட்கள் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, வைகை நதி நாகரீகத்தை கண்டறியும் நோக்கில் கீழடியில மேற்கொள்ளப்பட்ட 6ம் கட்ட அகழாய்வின் போது, க- ய என் தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள் கண்டுக்கப்பட்டுள்ளன. அதோடு நேர்த்தியான பவள மணிகள், சுடுமண்ணாலான முத்திரைகள், மாட்டினத்தின் விலா எலும்பு, எடைகற்கள், செங்கல் கட்டுமானங்கள், தாழியில் அமர்ந்த நிலையில் உள்ள எலும்புக்கூடு என வரிசை நீண்டு கொண்டே செல்கிறது.
கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் தரக்கூடிய வகையில் அடக்கம் செய்யப்பட்ட எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அகரத்தில் மென் கற்களும், நுண் கருவிகளும் மற்ற பொருட்களுடன் பட்டியலை அலங்கரித்தன. மேலும், 300 மி.கி. எடையுள்ள தங்க நாணயம் கண்டுபிடிக்கப்பட்டது.
மணலூரில் பழமையான கட்டுமான அடையாளங்கள், பழம் தொல் பொருட்கள் மற்றும் ஆதிச்சநல்லூரில் நுண்கற்காலக் கருவிகள், பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், இரும்பில் செய்யப்பட்ட தொல் பொருட்கள், முதுமக்கள் தாழி என பல அகழாய்வு முடிவில் வெளிவந்தன.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தொல் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் அகழாய்வுகளில் கிடைக்கும் அரிய வகை பொருட்கள் அனைத்தும் கொரோனா பரவல் காலத்திலும் ஓய்வின்றி பணியாற்றும் ஆய்வாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீழடி அகழாய்வுக்கு பிறகு தமிழகத்தில் தொல்லியல் அகழாய்வுகள் மீது ஆர்வம் அதிகரித்திருக்கும் நிலையில், முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது கடந்த 3 ஆண்டுகளில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் கிடைத்திருக்கும் தொல்பொருட்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து அருங்காட்சியகங்கள் மூலமாக விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.