வியாழன், 20 ஆகஸ்ட், 2020

உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன் - ராஜ் சத்யன்

 விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக அதிமுக அரசாங்கத்தை கேலி செய்யும் வகையில் எச்.ராஜா போட்டிருந்த ட்வீட், பாஜகவின் செயல்பாட்டாளர்களுக்கும் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கும் இடையில் சமூக ஊடகங்களில் கடும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

இரு கட்சிகளின் ஐ.டி பிரிவினரும் தற்போது சமூக வலைதளங்களில் சீறிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாமே ராஜாவின் கிண்டலான ட்வீட்டில் தொடங்கியது தான். விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதித்து கர்நாடக அரசு எடுத்த முடிவு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஹெச்.ராஜா, அதை “ஆண்மையுல்ல அரசு” என்று பாராட்டி, கொரோனா தொற்றுநோயை மேற்கோள் காட்டி அந்த கொண்டாட்டங்களை தடைசெய்த அதிமுக அரசாங்கத்தை கேலி செய்திருந்தார்.

கொரோனா தொற்றுநோய் மற்றும் தொற்று பரவுவது குறித்த அச்சம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களிலும், ஊர்வலத்திலும் விநாயகர் சிலைகளை நிறுவ எடப்பாடி பழனிசாமி அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றமும் மாநில அரசுக்கு ஆதரவாக உத்தரவை பிறப்பித்ததுடன், இதை மீறுபவர்கள் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

ராஜாவின் ட்வீட்டிற்குப் பிறகு, அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யனும், கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் ராஜ் சத்யனும் அவருக்கு பதிலடி கொடுத்தனர். “மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை, சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில், உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன்” என்றார் ராஜ் சத்யன்.

சென்னையில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களை திறக்க அரசாங்கம் எடுத்த முடிவை நினைவுக் கூர்ந்த ஹெச்.ராஜா, இந்துக்களின் பண்டிகைக்கு அனுமதி மறுத்ததை விமர்சித்தார். இதற்கு, “ஆண்மை என்பது யாதெனில் சாரணர் தேர்தலில் வெற்றி பெறுதல். நவீன திருவள்ளுவர்” என கோவை சத்யன் ட்வீட் செய்திருந்தார். அந்தத் தேர்தலில் வாக்களிக்கப்பட்ட மொத்தம் 286 வாக்குகளில் 58 வாக்குகளை மட்டுமே ராஜா பெற்றிருந்தார்.