மத்திய கிழக்கின் புவிசார் அரசியலை, புரட்டி போடும் விதமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் இருநாடுகளுக்கு இடையே கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, அந்த பிராந்தியத்துடனான இந்தியத் துணைக் கண்டத்தின் ஒத்துழைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த முனைகிறது.
“அரபு அல்லாத நாடுகளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் வழக்கத்தை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியிருப்பதால், அரபு இறையாண்மையை உறுதி செய்யும் விதமாக இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை புதுப்பிக்க வேண்டும்” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் மைய இயக்குனர் சி.ராஜா மோகன் வாதிடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், அரபு வளைகுடா நாடுகள் உடனான உறவுகளை ஆழமாகிவிட்டது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்த அவரின் சமீபத்திய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், பாகிஸ்தானுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் (குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,சவுதி அரேபியா) இடையேயான ஒத்துழைப்பு கடந்த 6 ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகளுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வளர்ந்து வரும் முரண்பாட்டின் சாராம்சத்தை பற்றி கூறுகையில், ” எல்லை விரிவாக்கத்தில் ஆர்வம் கொண்ட துருக்கி, ஷியைட் ஈரானின் ஆதரவு பெற்ற சன்னி இஸ்லாம் பிரதர்குட் (Sunni Muslim brotherhood) அமைப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,சவுதி அரேபியா சாம்ராஜ்யங்களுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இது ஒரு புறமிருக்க, துருக்கி, ஈரான் உள்ளடக்கிய ஒரு புதிய பிராந்திய கூட்டணியை இம்ரான் கான் முன்னெடுத்து வருகிறார். மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக சீனாவும், ரஷ்யாவும் இந்த புதிய புவிசார் அரசியல் உருவாக்கத்தை ஆதரிக்கும் என்றும் பாகிஸ்தான் நம்புகிறது.
ரஷ்யா, சீனா ஆதரவுடன் ஏற்படும் இந்த புதிய கூட்டணியால் அரபு உலகில் தங்கள் செல்வாக்கு அதிகரிக்கும் என்று துருக்கியும், ஈரானும் கருதுகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கியத்துவத்தை அடியோடு ஒழிக்க ரஷ்யர்கள் விரும்புகிறார்கள் என்பது இரகசியமல்ல. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ரஷ்யர்கள், துருக்கியர்கள், ஈரானியர்கள் அமெரிக்காவின் தடுப்பு முனையாக இருப்பதாலும், தனது பொருளாதார செல்வாக்கு அங்கு பலப்படுவதாலும் பெய்ஜிங் இந்த ஏற்பாட்டில் மகிழ்ச்சியாக இருக்கும்.
அமெரிக்கா மத்திய கிழக்கிலிருந்து வெளியேறும் காலம் நெருங்குகிறது என்றும், வளர்ந்து வரும் சீனாவுடனான அதன் நட்புறவு, மாறிவரும் மத்திய கிழக்கில் பாகிஸ்தானுக்கு புதிய அடையாளத்தையும், செல்வாக்கையும் உருவாக்கும் என்று இஸ்லாமாபாத் எண்ணுகிறது.
அதனால்தான், “அரபு இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது குரல் கொடுப்பதும், பிராந்திய ஸ்திரமின்மைகளை கெடுக்கும் சக்திகளை எதிர்ப்பதும், மத்திய கிழக்கு நாடுகள் உடனான இந்தியாவின் புதிய ஒத்துழைப்பின் மையமாக இருக்க வேண்டும்” என்று சி. ராஜா மோகன் நம்புகிறார்.