வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நாடு முழுவதும் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

 நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாட 7 மாநில முதலமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் இந்தாண்டு தேர்வு நடத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பா.ஜ.க. ஆளாத 7 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். காணொலி மூலம் பிற்பகலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட முதலமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாட 7 மாநில முதலமைச்சர்களும் முடிவு செய்துள்ளனர்.