செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக ராகுல் காந்தியை சந்தித்தார் சச்சின் பைலட்!

 ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், மீண்டும் காங்கிரசில் இணைந்து பணியாற்ற உள்ளார். 

 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அம்மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் துணை முதல்வர் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். இதனால், அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இதனிடையே, வரும் 14-ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கூடும் நிலையில், அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டு இருந்தார்.

 

இந்த நெருக்கடியான சூழலில் திடீர் திருப்பமாக, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை, சச்சின் பைலட் நேற்று மாலை சந்தித்துள்ளார். ராகுல் காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, சச்சின் பைலட், தனது குறைகளை விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. 

 

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேணுகோபால், சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கு சரியான தீர்வைக் காண 3 பேர் அடங்கிய குழுவை அமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சச்சின் பைலட், தங்களது குறைகளை சோனியாகாந்தி கேட்டறிந்ததால், தொடர்ந்து கட்சி பணியாற்றிடவுள்ளதாக தெரிவித்தார்.