ரஷ்யா தன்னுடைய சத்தியத்தை நிறைவேற்றியுள்ளது. இறுதி கட்ட மனிதர்கள் மீதான சோதனைக்கு முன்பே பயன்பாட்டிற்கு வந்ததுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸிற்கு அனுமதி பெறப்பட்ட முதல் தடுப்பூசி இதுவாகும். இதற்கு முன்பே சீனா தடுப்பூசியை கண்டறிந்திருந்தாலும், அவை பீப்பிள்ஸ் லிபரேசன் ஆர்மியில் பணியாற்றும் வீரர்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த தடுப்பூசியை கமலேயா நிறுவனம் (Gamaleya Institute) கண்டறிந்துள்ளது. மனித பரிசோதனைகள் ஆரம்பித்து இரண்டு மாதங்களுக்கும் குறைவான நேரத்திலேயே இதற்கு ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதன் பாதுகாப்பு தன்மை செயல்திறன் ஆகியவை குறித்த கவலைகள் எழுந்து வருகிறது. மற்ற கொரோனா தடுப்பு மருந்துகள் அடுத்த ஆண்டின் ஆரம்பத்திற்கு முன்பு பயன்பாட்டிற்கு வருவது சாத்தியமில்லை.
உற்பத்தி மற்றும் கிடைக்கும் தன்மை
கமாலேயாவை தவிர இந்த தடுப்பு மருந்து சிஸ்டெமா என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய பிசினஸ் குழுவில் இதுவும் ஒன்று. தன்னுடைய ஆலையில் ஆண்டுக்கு 1.5 மில்லியன் தடுப்பூசிகளை உருவாக்கும் திறன் கொண்டுள்ளது என சிஸ்டெமா அறிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு வெளியே இந்த தடுப்பூசிகள் கிடைக்க நேரம் ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளது. ரியூச்சர்ஸ் இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், ரஷ்யாவிடம் 1 பில்லியன் டோசேஜ்களை வாங்க வெளிநாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் ஆண்டுக்கு 500 மில்லியன் டோசேஜ்கள் உற்பத்தி செய்ய சர்வதேச ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் மருந்து வாங்க விருப்பம் தெரிவித்த நாடுகள் பட்டியல் வெளியிடப்படவில்லை.
இந்தியாவிற்கு இந்த மருந்து வருமா?
இந்தியாவிற்கு இந்த மருந்துகள் பயன்பாட்டிற்கு வர இரண்டு வழிகள் உள்ளது. மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation (CDSCO)) ரஷ்யாவிடம் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட சோதனைகளை இந்தியர்களிடம் மேற்கொள்ள கேட்கலாம். இந்தியாவிற்கு வெளியே உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் அனைத்தும் இந்த முறையில் தான் சோதிக்கப்படும்.
இறுதி கட்ட சோதனைகள் தான் மிகவும் முக்கியம். ஏன் என்றால் தடுப்பூசியின் செயல்திறன் ஒவ்வொரு குழுவிற்கும் ஏற்ற வகையில் மாறுபாட்டுடன் செயல்படும். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சோதனைகள் இப்படி தான் நடத்தப்படுகிறது, இந்த வாரத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் சோதனைகள் இந்தியாவில் ஆரம்பமாக உள்ளது.
இந்த அசாதாரணமான சூழலை மனதில் கொண்டு சி.டி.எஸ்.சி.ஒ. இறுதிகட்ட சோதனைகளுக்கு முன்பே தீவிர தேவைகளுக்காக பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. ரஷ்யாவில் நடத்தப்பட்ட மனித சோதனைகளில் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் திருப்திகரமாக அமைந்திருக்கிறது எனவே இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் அவசர தேவைக்கு அனுமதி வழங்கலாம் என்று கூறலாம். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தினை சிகிச்சைக்காக பயன்படுத்த இதேபோன்ற அவசர ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் இதே போன்று ரஷ்ய தடுப்பூசியை பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை.
நோயாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு மருந்து போலல்லாமல், தடுப்பூசிகள் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பயன்படுத்துதல் அவசியம் ஆகிறது. இந்த நோயின் விஷயத்தில், குறிப்பாக, அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். எனவே இதில் அபயாங்களும் அதிகம். மேலும், ரெமெடிசிவிர் ஏற்கனவே பிற நோய்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்தாக இருந்தது, மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மறுபயன்பாடு செய்யப்பட்டது, அதே நேரத்தில் இந்த தடுப்பூசி புதியது.
தயாரிப்பு ஒப்பந்தம் இல்லை
தடுப்பூசியை இந்தியாவில் உருவாக்குவது இரண்டாவது பிரச்சனையாகும். அனைத்து நோய்களுக்குமான தடுப்பு மருந்துகளில் 50% இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கொரோனா வைரஸிற்கு உலகில் வேறெங்கும் மருந்துகள் தயாரிக்கப்பட்டாலும் இந்தியாவிலும் அது உற்பத்தி செய்யப்படும். புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் ஏற்கனவே அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகளுக்காக ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. இந்தியாவில் இருக்கும் மற்ற நிறுவனங்களும் இது போன்று வெளிநாட்டு மருந்து தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுவரை ரஷ்யாவின் மருந்தினை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.