சனி, 29 ஆகஸ்ட், 2020

பீகாரில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர்: அரசு அறிவிப்பு!

 


பீகாரில் அனைத்து வீடுகளுக்கும் 2020ம் ஆண்டு இறுதிக்குள் சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், சில பகுதி மக்களுக்கு இன்னும் கூட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கவில்லை. உயிர்வாழ்வதற்கு அவசியமான குடிநீருக்கு பலர் திண்டாடி வருகின்றனர். அதனால் 2024ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பீகாரில் 2020ம் ஆண்டு இறுதிக்குள் இதற்கான பணிகள் முடிவடையும் என முதல்வர் நிதிஷ் குமார் உறுதியளித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் மற்றும் வெள்ளம் காரணமாக இத்திட்டத்தின் பணிகள் தடைபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் மொத்தமாக 89 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி அக்டோபர் இறுதிக்குள் முடிவடையும் என்றும் கூறியுள்ளார். 

அவர் மேலும் பேசுகையில், ’31 மாவட்டங்களில் உள்ள 30,419 வார்டுகளில் உள்ள குடிநீரில் ஆர்சனிக், ஃபுளூரைடு அல்லது இரும்பு ஆகியவை கலந்துள்ளதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய் ஏற்படாமல் தடுக்க சுத்தமான குடிநீரை வழங்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே போல் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் கிடைப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன’ என்றும் முதல்வர் கூறியுள்ளார்.