Liz Mathew
Explained: As head of House panel, can Shashi Tharoor summon Facebook? : பாஜகவின் எம்.பி. நிஷிகாந்த் துபே, காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் மீது புகார் ஒன்றை வைத்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தின் பாராளுமன்ற நிலைக்குழு தலைவராக அங்கம் வகிக்கும் சசி தரூர், முகநூல் நிறுவன அதிகாரிகளை நேரில் ஆஜராக கூறி கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அப்படி கூறும் போது நிலைக்குழுவின் விதிமுறைகளை அவர் மீறிவிட்டதாக நிஷிகாந்த் குற்றம் சுமத்தியுள்ளார்.
அந்த நிலைக்குழுவின் உறுப்பினராக பணியாற்றும் துபே சசி தரூர் முறையாக விதிகளை பின்பற்றவில்லை என்றும், மக்களவை பொதுச்செயலாளரின் கடிதம் இல்லாமல் எப்படி சம்மன் அனுப்ப முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வால்ஸ்ட்ரீட் ஜர்னலில், முகநூல் இந்தியாவின் உயர்மட்ட பொதுக்கொள்கை அதிகாரி, பாஜகவின் வெறுப்பு கருத்துகளுக்கு நடவடிக்கை எடுப்பதை எதிர்த்துள்ளார் ஏன் என்றால் அது இந்தியாவில் முகநூலின் தொழிலை பாதிக்கும் என்று கூறியுள்ளார் என செய்தி வெளியிட்டது. இது போன்ற பொதுநல விவகாரங்களை நிலைக்குழு தலையீடக்கூடாது என்று கூறுவது அசாதரணமானது என நிராகரித்துள்ளார் சசி தரூர்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
சசி தரூர் தலைமை வகிக்கும் கமிட்டி எது?
பாராளுமன்ற கமிட்டிகள் பாராளுமன்றத்தின் நீட்சியாக பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்தின் இரு வகைகளும் குறிப்பிட்ட நேரங்களில் இயங்கும் போது சட்டங்கள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களை இவை மேற்கொள்கிறது. அவை செயல்படும் வரை நிலைக்குழுக்களும் இயங்கும். இரு அவைகளால் இவர்கள் நியமிக்கப்பட்டிருக்கலாம். அல்லது மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவரால் இக்குழு உருவாக்கப்படுகிறது. தலைமை அதிகாரிகளின் கீழ் இயங்குகிரது இந்த குழுக்கள். இந்தியாவில் 24 நிலைக்குழுக்கள் இருக்கின்றன. அவற்றில் 16 துறைகள் மக்களவையாலும் 8 துறைகள் மாநிலங்களவையாலும் நிர்வகிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப நிலைக்குழு சசி தரூரால் நிர்வகிக்கப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர்கள் 9 நபர்களும், மக்களவை உறுப்பினர்கள் 20 பேரும் இதில் இடம் பெற்றுள்ளனர். ஆளும் கட்சியினர் அதிக அளவில் இதில் இடம் பெற்றுள்ளனர். 30 பேர் அடங்கிய இக்குழுவில் 15 நபர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள். சசி தரூர் உட்பட 4 பேர் காங்கிரஸ். திருணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் தலா இருவரும், சிவசேனா, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, சிபிஎம், எல்.ஜே.எஸ்.பி, திமுகவில் இருந்து தலா ஒவ்வொரு உறுப்பினர்களும், இரண்டு சுயேட்சை உறுப்பினர்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த கமிட்டி என்ன செய்யும்?
பாராளுமன்ற செயல்கள் திறம்பட நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும், அவர்களின் பார்வைக்கு வரும் மசோதாக்கள் குறித்து விவாதிக்கவும் இக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் போதும் மற்ற நேரங்களும் இவர்கள், முக்கிய அதிகாரிகள், துறைசார் வல்லுநர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்துவார்கள். மசோதாக்கள் என்று வரும் போது அவையில் இருப்பது போன்று கட்சி சார்பாக இல்லாமல் விவாதங்கள் மேற்கொள்ளப்படும். துறைசார் நிலைக்குழுக்கள் அமைச்சரவைக்கு தேவையான மானியங்கள் குறித்த கோரிக்கைகளை ஆராயும், அவர்களின் தொடர்பில் இருக்கும் அமைச்சரவையின் நீண்ட நாள் கொளை ஆவணங்களையும், வருடாந்திர அறிக்கைகளையும் வெளியிடும்.
தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு 1993ம் ஆண்டு (அன்று அவை தொலைத்தொடர்பு நிலைக்குழுவாக இருந்தது) உருவாக்கப்பட்டது அஞ்சல் துறை, தொலைத் தொடர்புத் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உள்ளிட்ட தகவல் தொடர்பு அமைச்சகத்தால் கையாளப்படும் விஷயங்களை விசாரிக்க அதிகார வரம்பு இந்த நிலைக்குழுவுக்கு உள்ளது.
முகநூலுக்கு சம்மன் வழங்க இந்த நிலைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளதா?
நேரில் வந்து ஆஜராக, விளக்கமளிக்கவும் முகநூல் மற்றும் இதர நிறுவனங்களுக்கு சம்மன் அளிக்க இக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. நிர்வாக அதிகாரங்கள் இந்த குழுவிற்கோ தலைவருக்கோ இல்லை என்றாலும் ஒருவரை நேரில் வந்து சாட்சியம் அளிக்க அழைக்க அதிகாரம் உள்ளது. நீதிமன்றத்தில் ஒருவர் ஆஜராவதற்கு இணையானது பாராளுமன்ற கமிட்டியின் முன்பு ஆஜராவது. ஒருவரால் வர இயலவில்லை என்றாலும் அதற்கான காரணத்தை கூற வேண்டும். அதனை ஏற்கவும் மறுக்கவும் பேனலுக்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும் கமிட்டியின் தலைவருக்கு அக்குழுவின் பெரும்பான்மை ஆதரவு தேவை. அக்குழுவில் எவர் வேண்டுமானாலும் அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடலாம். ஒருவேளை அக்குழுத்தலைவரின் முடிவுக்கு பெரும்பான்மை இல்லையென்றால் அவர் சம்மனை ரத்து செய்ய வேண்டியிருக்கும் என்று என்று அரசியலமைப்பு நிபுணரும் மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளருமான சுபாஷ் காஷ்யப் கூறுகிறார்.
கடந்த காலத்திலும் இது போன்ற தனிநபர்களையும் நிறுவனத்தையும் நேரில் ஆஜராக கூறிய சம்பவங்கள் எல்லாம் உண்டு. ஆனால் ஆளும் கட்சிபெரும்பான்மை இருக்கும் போது தலைவர்களுக்கு ஆதரவாக இருக்கும். ஆனால் இங்கு நிலைமை வேறு சசி தரூர் தலைவராக இருக்கிறார். ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் பாஜகவினராக இருக்கின்றனர் என்றும் காஷ்யப் கூறுகிறார்.
பாஜகவின் வாதம் என்ன?
சசி தரூர் இந்த நிலைக்குழுவின் ஒப்புதலையும் வாங்கவில்லை மக்களவை சபாநாயகரின் ஒப்புதலையும் பெறவில்லை. விதிமுறைகளை சசி மீறிவிட்டார் என்று துபேய் வாதிக்கிறார். விதி 296(1) -ல் கூறப்பட்டிருக்கும் நிலைக்குழு விதிமுறைகள் “ஒரு சாட்சியை ஆஜராக அழைக்கும் உத்தரவில் பொதுச்செயலாளர் கையெழுத்திட வேண்டும் மேலும் கமிட்டியின் பயன்பாட்டிற்காக அதில் ஆவணங்கள் தயாரிக்கப்படும்” என்பதாகும்.
இவ்விவகாரத்தை பாஜக நிறுத்த முடியுமா?
சட்டப்படி என்றால் ஆம். ஆனால் கூட்டத்தொடர்கள் நடைபெறாத நிலையில், விரைவில் கூட்டம் நடைபெறாத நிலையில், விசயம் பொதுநலனாக இருக்கும், நிலைக்குழு தலைவர் முடிவுகளை எடுக்கலாம். ஆனாலும் பெரும்பான்மையை வைத்து தலைவரின் முடிவை நிராகரிக்கலாம். எனவே, இந்த விஷயத்தில் தலைவர் தரூரின் நகர்வை சபாநாயகர் ஆதரிக்கவோ நிராகரிக்கவோ முடியும்.
இந்த பிரச்சனை ஏன் முக்கியமானது?
இது பொதுநல விவகாரம் என்று சசி தரூர் கூறுகிறார். மேலும் பாராளுமன்ற நிலைக்குழுகள் உலகம் முழுவதும் தவறான போலி செய்திகளை பரப்புவதில் முகநூல், வாட்ஸ் ஆப், மற்றும் ட்விட்டரின் பங்குகள் குறித்து கவலை தெரிவித்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் சமூக வலைதளங்களில் இருக்கும் போலி செய்திகள் மற்றும் பிரச்சாரங்களுக்கு சமூக ஊடங்களை பயன்படுத்துதல் போன்றவை தொடர்பாக சம்மன் அனுப்பியுள்ளது.
முகநூல் நிறுவனம் இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக தலைவர்கள் பதிவிட்டிருந்த கருத்துகளை ப்ளாக் செய்யவில்லை என்றும் வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் குற்றம் சுமத்தியுள்ளது. தெலுங்கானாவின் பாஜக எம்.எல்.ஏ டி ராஜா சிங் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவுட்ட கருத்து சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது என்று மேற்கோள்காட்டியிருக்கும் அந்நிறுவனம், முன்னாள் மற்றும் இந்நால் முகநூல் ஊழியர்கள், முகநூல் பொதுக்கொள்கை தலைவர் அன்கி தாஸின் தலையீடு ஆளும் கட்சிக்கு ஆதரவான வகையில் இருந்தது என்று கூறியுள்ளனர்.
தேர்தல் ஆணையம், பிகார் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திய போது, பல கட்சிகளும் டிஜிட்டல் பிரச்சாரங்கள் பாஜகவிற்கு தேவையற்ற நன்மையை அளிக்க கூடும் என்று கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய நாடாளுமன்ற அவையில், ஐ.டி. பேனலின் தலைவராக இருந்தவர் பாஜகவின் அனுராக் தாக்கூர். ட்விட்டர் இந்தியாவிற்கு சம்மன் அனுப்பி, சமூக வலைதளங்களில் குடிமக்களின் உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பாக கருத்துகளை சமர்பிக்க கூறினார். தன்னார்வ குழுக்கள் நிலைக்குழுவிற்கு வலதுசாரி ட்விட்டர் கணக்குகளுக்கு எதிராக ட்விட்டர் நிர்வாகம் செயல்படுகிறது என்று புகார்கள் எழுப்பியதன் விளைவாக இம்முடிவை மேற்கொண்டது அக்குழு.
பாஜகவிற்கு ஆதரவாக முகநூல் செயல்படுகிறது என்று யார் புகார் அளிக்கின்றனர்?
வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் செய்திக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி கூட்டு பாராளுமன்ற குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறியது. சி.பி.ஐ.(எம்) கட்சியினரும் இதனை வலியுறுத்தினர்.
அங்கி தாஸ் மற்றும் அவருடைய சகோதரி ரஷ்மி தாஸ் (முன்னாள் ஏ.பி.வி.பி. ஜே.என்.யூ தலைவராக இருந்தார்) இந்த விவகாரத்தில் என்ன சம்பந்தம் என்று கேள்வியுள்ளனர் காங்கிரஸ் கட்சியினர். 2017ம் ஆண்டு ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியில் பேஸ்புக் ஊழியர்கள் தேர்தலின் போது பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உண்மையான பிரச்சார ஊழியர்களாக மாறிவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தது. 2016ம் ஆண்டு கார்டியன் பத்திரிக்கை அங்கி தாஸிற்கும் பாஜகவிற்கும் இடையேயான தொடர்பு குறித்து செய்தி வெளியிட்டது.