புதன், 19 ஆகஸ்ட், 2020

தங்கத்தை போல உயரும் வெள்ளி விலை...கவலை கொள்ளும் நகை வியாபாரிகள்!

 தங்கத்தை போன்றே வெள்ளியின் விலையும் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், வெள்ளி  தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழந்து, மாற்று வேலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வெள்ளியின் புகுந்த வீடு என்ற பெருமை சேலத்திற்கு உள்ளது. விவசாயம், நெசவு ஆகியவற்றுடன், வெள்ளித் தொழிலும் சேலத்தின் பிரதான அடையாளமாக உள்ளது. இங்குள்ள பட்டறைகளில் வெள்ளி கொலுசுகள் நேர்த்தியான வடிவமைப்புடனும், கலைநயமிக்க வேலைப்பாடுகளுடனும் தயாராவதால், தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களில் இருந்தும் வெள்ளி கட்டியை கொடுத்து அதற்கு மாற்றாக கொலுசு, மெட்டி, அரைஞாண் கொடியை வாங்கிச் செல்வது வழக்கம். 

கொரோனா வைரஸ் பீதியால், கடந்த மார்ச் 25-ம் தேதி முதல், சேலத்தில் ஆயிரக்கணக்கான வெள்ளி பட்டறைகள் மூடப்பட்டன. தற்போது தளர்வுகளுடன் பட்டறைகள் செயல்பட்டு வந்த போதிலும், வெள்ளியின் விலையில், ஏற்றம் இறக்கம் காரணமாக பட்டறைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. வெள்ளித் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் பலரும், தற்போது வேலையின்றி தவித்து வருகின்றனர்.

Image

கடந்த சில நாட்களாக தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும், மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. எனவே, வெள்ளி தொழிலை தலைமுறை தலைமுறையாக செய்து வந்த நிலை மாறி, தற்போது மாற்றுத் தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, பட்டறை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கொரொனா வைரஸ் பரவல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய வெள்ளிக் கட்டிகள் வராமல் உள்ளதால், தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த 4 மாதங்களில் மட்டும், வெள்ளியின் விலை இருமடங்கு விலை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.37,000 முதல் ரூ.39,000 வரை விற்பனையானது. 

தற்போதைய நிலவரப்படி ரூ.77,000 வரை உயர்ந்துள்ளது. நான்கு மாதத்தில் ஒரு கிலோ வெள்ளி ரூ.35,000 வரை விலை அதிகரித்துள்ளது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. 

ஜிஎஸ்டி, கொரோனா ஊரடங்கு, வெள்ளி விலை ஏற்றம் என பல்வேறு காரணங்களால், சேலத்தின் பிரதான அடையாளமான வெள்ளி கொலுசு உற்பத்தி தொழில் முடங்கிக் கிடக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அரசின் நிவாரண அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.