பல நூறு வருடங்களுக்கு முன்பு மதுரை பாண்டிய வம்சத்தினர் மற்றும் வீரர்களின் இன்னல்களுக்கு ஆளான ஒரு பகுதி மக்கள், மதுரையில் இருந்து மெல்ல மெல்ல புலம் பெயர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் குடியமர துவங்கினர். முதுகில் மீனாட்சி சிலையை தூக்கிக் கொண்டு வந்ததால் இவர்கள் முதுவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தின் போடி நாயக்கனூரில் துவங்கி கேரளத்தின் சாலக்குடி வரையில் உள்ள சுமார் 300 கி.மீ பகுதியில் 250 குடிகளில் முதுவர்கள் வாழத்துவங்கினர். மூன்று குடும்பங்கள் துவங்கி 90 குடும்பங்கள் வரை ஒவ்வொரு குடியிலும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நிலப்பகுதிகளில் இருந்து மலைகளுக்குள், குறிப்பாக மற்ற பழங்குடிகள் யாரையும் கண்டுவிடாத வகையில் உயரமான சிகரங்களில் தங்களின் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர் முதுவர்கள். ஒரு சில கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் மற்ற பழங்குடிகளுடனும் இவர்கள் எந்த விதமான கொடுக்கல் வாங்கல்களை கொள்வதில்லை. வெளியாட்களை கண்டால் அஞ்சு ஒதுங்கிச் செல்லும் பழக்கம் இன்றும் அவர்களிடம் உள்ளது. வயது வந்த ஆண்களையும் பெண்களையும் முறையே சாவடி மற்றும் திண்ணை வீடுகளில் வைத்திருப்பது வழக்கம். அப்பழங்குடி பெண்கள் தங்களின் குடிகளை விட்டு எப்போதும் வெளியேறுவதில்லை. மற்ற பழங்குடியின ஆண்களை பார்ப்பதும் குற்றம் என்று கூறி வளர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவரிப்பு, முதுவர் பழங்குடியை சேர்ந்த ஸ்ரீதேவி 10ம் வகுப்பில் ஏ+ கிரேட் வாங்கியதன் பின்புலத்தை விளக்க உதவுகிறது.
மேலும் படிக்க : அமெரிக்காவில் ஒலிக்க இருக்கும் இருளர் பழங்குடி குழந்தைகளின் குரல்கள்!
பூச்சிக்கொட்டாம்பாறை பழங்குடி கிராமம்
ஆனைமலை புலிகள் காப்பகத்தின், உடுமலைப்பகுதி சரக எல்லைக்குள் அமைந்திருக்கிறது பூச்சிக்கொட்டாம்பாறை முதுவர் கிராமம். குறுமலை, வெள்ளிமுடி மற்றும் கருமுட்டி ஆகிய பகுதிகளிலும் இம்மக்கள் வசித்து வருகின்றனர். கோவையின் மேல் ஆழியாறு அணையில் இருந்து 15 கி.மீ தொலைவிற்கு அப்பால், காடுகளும், மரங்களும், கரடுகளும், அருவிகளும், நீரோடைகளும் சூழ, வெளியுலக வாழ்விற்கு அப்பால், அமைதியாய் அமைந்திருக்கிறது பூச்சிக்கொட்டாம்பாறை. போதுமான சாலை போக்குவரத்து அங்கு கிடையாது என்பது மிகப்பெரிய குறை. கடந்த காலங்களில் பெய்த மழையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த சாலைகள் வெறும் ஜல்லிக்கற்களை மட்டுமே கொண்டதாக இருக்கிறது. யானைகளும், புலிகளும் சகஜமாய் வந்து செல்லும் அப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்றால் அந்த ஊர் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். சில இடங்களில் வெறும் சிமெண்ட்டை மட்டும் கொட்டி, சாலை என்று காரணப்பெயர் சூட்டியுள்ளனர். மண் பாதை, மலையின் சரிவில் அமைந்திருக்கும் அந்த முதுவர் கிராமத்தை தடுத்து நிறுத்தியது மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட வாயிற்கதவு.
இங்கு 42 குடும்பங்களில் முதுவர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களின் விளை நிலத்தையும், குடியிருப்பு பகுதிகளையும் தனித்தனியாக வைத்திருக்கின்றனர். வெளியாட்களை கண்டறியவும், வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கண்காணிப்பு கோபுரங்கள் வைத்துள்ளனர். குடியிருப்பு பகுதி கீழ் நில மக்களுக்கு தெரியாத வகையில் மலைக்கு அந்த பக்கம் இருக்கும் சமவெளியில் இருந்தது. நீண்ட தூர பயணத்திற்கு பிறகு ஸ்ரீதேவியை அவருடைய வீட்டிலேயே வைத்து சந்தித்தோம். அவர்களின் மரபுப்படி ஆடை உடுத்தியிருந்த ஸ்ரீதேவி, புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே கூறியதால் அவரின் பள்ளி குறித்தும் பத்தாம் வகுப்பு தேர்வினை எவ்வாறு எழுதினார் என்றும் கேட்க துவங்கினோம்.
”நான் என்ன மதிப்பெண்கள் வாங்கியிருக்கின்றேன், என்னவாக மாற விரும்புகின்றேன் என்பதெல்லாம் இங்கிருக்கும் எங்கள் மக்களுக்கு தேவையற்றது தான். அவர்களில் பெரும்பாலானோர் படிக்காதவர்கள். பலருக்கும் நான் என்ன படிக்கின்றேன், எங்கே படிக்கின்றேன் என்பதே தெரியாது. அதனால் இந்த தேர்வில் நான் எடுத்திருக்கும் மதிப்பெண் பெற்ற பற்றிய மகிழ்வுகளும் கொண்டாட்டங்களும் இங்கு இல்லை” என்கிறார் ஸ்ரீதேவி.
”நீட் தேர்வு எழுதி மருத்துவராக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை மற்றும் கனவு எல்லாமே. ஆனால் இங்கு மின்சார வசதிகளோ, நூலகங்களோ இல்லை. கொரோனா வைரஸ் எப்போது முடியும் என்றும் தெரியவில்லை. வேறேதும் வேலையில்லாத நேரத்தில் நான் நூல்களை வாசிக்கவே விரும்புகின்றேன். ஆனால் நூலகம் வால்பாறையில் தான் இருக்கிறது. தற்சமயம் கொரோனா என்பதால் திறந்திருக்கவும் வழியில்லை” என்று கூறும் ஸ்ரீதேவி, தன்னுடைய தந்தைக்கு உதவியாக அவருடைய விவசாய பூமியில் வேலை செய்து வருகிறார்.
பள்ளியை பற்றி பேசும் போது “எனக்கு என்னுடைய சினி டீச்சர் போன்று ஆக வேண்டும். அவர் எங்களுடைய விளையாட்டு பயிற்றுநர். அவரைப் போன்று விளையாட்டுத்துறையிலும் நான் சாதிக்க விரும்புகின்றேன். என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் எல்லாம் அவர் மட்டும் தான். கணக்கு கொஞ்சம் புரியாத புதிராக இருக்கிறது என்றாலும் 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும் கூறினார்.
”வனத்துறையினர் கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்துள்ளனர். இரண்டு நாட்களுக்குள் லேப்டாப் வாங்கித் தருவதாக கூறினார்கள். ஆனாலும் அதை வாங்கி வைத்தால் என்ன செய்வது? எங்கே சார்ஜ் போடுவது? சோலார் மூலம் சார்ஜ் போட்டாலும், நெட்வொர்க் இல்லையே! அதன் மூலம் என்ன கற்றுக்கொள்வது?” என்று கேட்கும் ஸ்ரீதேவியின் மேற்படிப்பிற்கான செலவு முழுவதையும் கேரள அரசு ஏற்றுக்கொள்ள இருப்பதாக அறிவித்திருக்கிறது.
அருகில் பள்ளிகள் ஏதும் இல்லாத சூழலில், தொடர்ந்து உண்டு உறைவிட பள்ளிகளில் படித்திருப்பதாலும், பல்வேறு கலாச்சார மையங்களுக்கு மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே வருவதாலும், முதுவர் பழங்குடிகளின் தொல்லியல், மரபுகள், வரலாறுகள் குறித்த எந்த பிரக்ஞையும் இன்றி இருக்கிறார் ஸ்ரீதேவி.
எம்.ஆர்.எஸ் பள்ளி
ஸ்ரீதேவியின் அப்பா செல்லமுத்து தன் இரண்டு மகள்களும் எழுத்தறிவு பெற வேண்டும் என்று விரும்பினார். மூத்தமகள் சிவராணி 10ம் வகுப்பு தேர்வு எழுதியவுடன், சில மாதத்தில், இடுக்கியில் திருமணம் செய்து தரப்பட்டார். ஆனால் ஸ்ரீதேவியின் படிப்பு எக்காரணம் கொண்டும் தடைபெறாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினார் செல்லமுத்து. ஆரம்பத்தில் வால்பாறையில் அமைந்திருக்கும் ஆதிதிராவிடர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்ரீதேவியை படிக்க வைத்தார். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அவரால் அங்கு தன் மகள் படிப்பதை செல்லமுத்து விரும்பவில்லை. பிறகு கேரளாவில் இருக்கும் முதுவர் குழந்தைகள் படிக்கும் பள்ளி குறித்து அவர் கேள்விப்பட்டார். கேரளாவின் திருச்சூர் மாவட்டம், சாலக்குடி தாலுக்காவில் அமைந்திருக்கும் எம்.ஆர்.எஸ் பள்ளியில் தன் மகளை படிக்க வைத்தார்.
சாலக்குடியில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் நாயரங்காடி பகுதியில் அமைந்துள்ளது Model Residential School என்ற உண்டு உறைவிடப்பள்ளி. மாநில பழங்குடியினர் துறை, கல்வித்துறை மற்றும் எஸ்.சி/எஸ்.டி. நலத்துறையின் கீழ் இப்பள்ளி இயங்கி வருகிறது.
இறுதி நிமிடத்தில் தெரிய வந்த 10ம் வகுப்பின் திருத்தப்பட்ட அட்டவணை
கேரளாவில் 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 10ம் தேதி துவங்கியது. 26ம் தேதி நிறைவுறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மொழித்தேர்வு, ஆங்கிலம் உள்ளிட்ட தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் வேதியியல், இயற்பியல், மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. திடீரென தேர்வு அறிவிக்கப்பட்டால் என்ன செய்வது என்று யோசித்து, தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கியிருந்தார் ஸ்ரீதேவி. சாலக்குடியில் அமைந்திருந்த அடிச்சில்தொட்டி கிராமத்தில் தங்கியிருந்த ஸ்ரீதேவியை சில வாரங்கள் கழித்து தன்னுடைய பூச்சிக்கொட்டாம்பாறைக்கு அழைத்து வந்தார் செல்லமுத்து. சாலைகள், மின்சாரம், நெட்வொர்க் வசதிகள் ஏதும் அற்ற பகுதியில் வசிப்பதால் வெளியே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வது சிரமமான காரியம் தான். கேரள கல்வித்துறை கொரோனா ஊரடங்கின் போது இரண்டு முறை 10ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்து, மே 26ம் தேதி நடத்த திட்டமிட்டது.
மேலும் படிக்க : யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது? தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு?
மே 24ம் தேதி வரை இது குறித்த செய்திகளை அறியாத ஸ்ரீதேவிக்கு சின்னாறு எக்கோ டூரிசத்தில் பணி புரியும் நபர்கள் மற்றும் வாட்ச்சர் உதவியுடன் மாற்றப்பட்ட அட்டவணை வந்து சேர்ந்தது. மே மாதம் 26ம் தேதி அதிகாலை தன் தந்தை உதவியுடன் 7 கி.மீ தூரம் நடந்தே சென்ற ஸ்ரீதேவி, அங்கிருந்து தன் தந்தையின் வண்டியில் தமிழக கேரள எல்லையான மழுக்குப்பாறை வரை சென்றுள்ளார். அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 70 கி.மீ அப்பால் அமைந்துள்ளது அப்பகுதி. அங்கிருந்து சாலக்குடி ஒரு 80 கி.மீ. இந்த 80 கி.மீ பயணத்திற்கு வட்டலப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்திருந்தது கேரள கல்வித்துறை. 150 கி.மீ-க்கு மேலும் பயணம் செய்து, தேர்வு எழுத சரியான நேரத்திற்கு செல்லவில்லை ஸ்ரீதேவி. அரை மணி நேரம் தாமதமாகவே வந்தார்.
“அவருக்காக நாங்கள் காத்திருந்தோம். அவள் வகுப்பில் முதல் மதிப்பெண் பெரும் மாணவி. அவளுடைய வீடு தொலைத்தொடர்புகளுக்கு அப்பால் அமைந்திருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். எந்த பிரச்சனையும் இன்றி அவள் தேர்வு எழுதுவதை தான் நாங்கள் விரும்பினோம். அட்டியா பட்டியா (கிளியந்தட்டு) போட்டியில் விளையாடும் ஸ்ரீதேவி தேசிய அளவில் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். இந்த மலைகிராமத்தில் இருந்து வந்திருக்கும் சின்னஞ்சிறிய பெண், எங்களின் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வகையில் கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீரில் விளையாடியுள்ளார். அவள் தேர்வு எழுதாமல் போயிருந்தால் எங்களுக்கெல்லாம் அது மிகவும் வருத்தமாக அமைந்திருக்கும்” என்று கூறுகிறார் அப்பள்ளியின் நிர்வாக தலைவர் நந்தினி. பள்ளிகள் விரைவில் துவங்க வேண்டும். அவளை பாராட்டுவதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறுகிறார் அவர். 300க்கும் மேற்பட்ட பெண்கள் படிக்கும் இப்பள்ளியில் பெரும்பான்மையானோர் மலைப்பழங்குடியினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் தேர்வு முடிந்ததும் தனி அறையில் குவாரண்டைன் செய்யப்பட்டார். மூன்று தேர்வுகளையும் எழுதி முடித்த அவர் மே மாதம் 31ம் தேதி, அதே ஆம்புலன்ஸ் மூலமாக தமிழகத்திற்கு திரும்பினார்.
இரண்டு கேள்விகளுக்கான பதிலைத் தேடித்தான் ஸ்ரீதேவியை பார்க்க சென்றோம். ஏன் இவ்வளவு தூரம் பயணம் செய்து கேரளாவில் படிக்க வேண்டும்? செல்லமுத்து அடிக்கடி பேசும், பெயர் கூற விரும்பாத, அரசு அதிகாரி ஒருவர் கூறிய போது ”செல்லமுத்துவிற்கு தன் மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் இங்கு அது சாத்தியமற்றதாகவே இருக்கிறது. வால்பாறையில் அவர்கள் எதிர்பார்க்கும் வசதி இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். முதுவர் பழங்குடிகளின் மொழி தமிழையும் மலையாளத்தையும் கலந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான வார்த்தைகளும் புழக்கங்களும் மலையாளம் என்பதால் அவர் ஸ்ரீதேவியை கேரளாவில் படிக்க வைத்துள்ளார்” என்றார்.
அவர் தேடும் எந்த வசதி இங்கில்லை என்ற கேள்வியும் எழுந்தது. ”பள்ளிகளும் ஆசிரியர்களும் இல்லை என்பது தான் உண்மை. ஆனைமலை வருவாய் கோட்டத்திற்குள் பழங்குடிகளுக்கான உறைவிட பள்ளி என்பது ஒன்றே ஒன்று தான். அது டாப்சிலிப்பில் அமைந்துள்ளது. இங்கிருப்பவர்கள் ஆழியாறு வந்து பிறகு டாப்சிலிப் செல்வது என்பதும் சவலானது தான். முறையான சாலைகள் இல்லாமல் இருப்பது மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒன்றிணைக்க வேறு வழியில்லாமல் போகிறது. புலிகள் சரணாலயத்தின் கீழ் இப்பகுதி வருவதால், இங்கு நிலம் சார்ந்த பிரச்சனைகளை மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். நிலம் உறுதி செய்யப்படாத வகையில் இங்கே மேம்பாட்டு திட்டங்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மின்சார வசதி, சாலை வசதிகள் என்ற கேள்விகள் அனைத்திற்கும் இது புலிகள் சரணாலயம் என்ற பதில் வருவதும் இயல்பான ஒன்றாக அமைந்துவிடுகிறது. சாலை வசதிகளும், முறையான மின்சார வசதிகளும் இல்லாமல் இவர் தேர்வை தவறவிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற யோசனையும் பயத்தை தருகிறது. ஒருவருட உழைப்பு, ஒரு தகப்பனின் கனவு, ஒரு எதிர்காலம் நோக்கிய திட்டங்கள் எல்லாம் இதில் அடங்கியிருக்கிறது. அனைத்து குழந்தைகளுக்கும் செல்லமுத்து போன்ற அப்பா கிடைப்பதில்லை. போதுமான வசதிகள் புலிகள் சரணாலயத்தில் இல்லாமல் இருப்பதும், அதனை மேம்படுத்தாமல் இருப்பதும் ஒருவகையில் திட்டமிட்ட வன்முறை. இது பழங்குடிகளின் வளர்ச்சியை தடுக்கிறது” என்கிறார் ஆனைமலை பழங்குடிகளின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பணியாற்றும் செயற்பாட்டாளர் தன்ராஜ்.
பள்ளிகளும் – சாலைகளும் – ஆசிரியர்களும்
மணிக்கணக்கில் பயணம் செய்து தான் ஒரு பழங்குடி கிராமத்தின் எல்லையையே அடைய முடியும். அங்கிருந்து பரவி விருந்திருக்கும் காட்டிற்குள் தனித்து நடந்து செல்வதும் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டு செல்வதும் சவலானது தான். பழங்குடிகள் வாழும் பகுதியில் மக்கள் தொகை என்பது மிகவும் குறைவு. பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவு தான். அவர்களை ஒரு இடத்தில் கட்டிப்போட்டு வைக்கும் படி ஆர்வத்துடன் பாடங்களும் பாடத்திட்டங்களும் இல்லை.சாலைகள் இல்லை, பள்ளி காட்டிற்குள் இருக்கிறது என்பது போன்ற விசயங்கள் மலைப்பகுதியில் வேலைக்கு சேரும் ஆசிரியர்களுக்கு வசதியான காரணங்களாக அமைந்துவிடுகிறது.
”பாலகனாறு, காடம்பாறை பகுதிகளில் செயல்பட்டு வந்த பள்ளிகள் இப்போது என்ன ஆனது, அங்கு படித்த மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்து யாருக்கும் கவலை இல்லை. உறைவிடப்பள்ளியில் வார்டன்களும் மாணவர்களுக்கு சரியாக உணவு சமைத்து தருவதில்லை என்பதால் மாணவர்கள் காட்டு வழியே நடந்து சென்று வீட்டிற்கு சென்றுவிடுகிறனர். மாவடப்பு பகுதியில் இயங்கி வரும் பள்ளிக்கு பொள்ளாச்சியில் இருந்து ஆசிரியர் ஒருவர் வருகிறார். ஆனால் அவர் வாரத்திற்கு இரண்டு நாள் மட்டும் தான் வருவார். திங்கள் கிழமை மலையேறினால் செவ்வாய்கிழமை மாலை மலையிறங்கிவிடுவார். இந்த லட்சணத்தில் பள்ளிகள் இயங்கினால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள்” என்று கேள்வி எழுப்புகின்றனர் மலைப்புலையர்கள் மற்றும் முதுவர்கள்.
ஆனைமலை, வால்பாறை, மற்றும் உடுமலைப்பேட்டை மலைவாழ் குழந்தைகளுக்காக இயக்கப்படும் ஆரம்ப பள்ளிகளின் எண்ணிக்கையை கேட்ட போது வனத்துறை, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பொள்ளாச்சி வருவாய் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் என எங்கும் இதற்கான விடை கிடைக்கவில்லை.
வாழ்வாதாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் சாலைகள்”இது குறித்து அங்கு வாழும் காட்டுப்பட்டி மலைப்புலையர் ஒருவரிடம் கேட்கும் போது, எங்கள் காடுகளில் நிலக்கடலை, மொச்சை, பீன்ஸ், அவரை வகைகளை பயிரிடுகின்றோம். தேன் சேகரிக்கின்றோம். கிழங்கு அகழ்கின்றோம். மேலும் இஞ்சிப்புல் தைலம் தயாரிக்கின்றோம். இதற்கான சந்தைகள் உடுமலை, பொள்ளாச்சி, மறையூர் (கேரளா), வால்பாறை ஆகும். அனைத்து பொருட்களையும் சந்தைப்படுத்த இந்த சாலை தான். வெளியுலக தொடர்பினை உருவாக்கவே சாலைகள். ஆனால் இங்கு எல்லாம் தலைகீழ். தவறான நேரத்தில் ஒரு பிரேக் அடித்தால் சாலையை ஒட்டி இருக்கும் பெரும்பள்ளத்தில் வீழ்ந்து தான் கிடக்க வேண்டும்” என்கிறார். கல்விக்கு மட்டுமல்ல, வாழ்வாதாரத்திற்கும் சாலைகள் முக்கியமானவை. இந்த சாலைகள் ஒருவேலை சரி செய்யப்பட்டால் இந்த பகுதியில் இருந்து நிறைய ஸ்ரீதேவிகள் கல்விக்காக 150 கி.மீ, 200 கி.மீ சாகச பயணம் மேற்கொள்ளாமலேயே சாதிப்பார்கள்.