திங்கள், 31 ஆகஸ்ட், 2020

கொரோனா பொதுமுடக்க தளர்வு அன்லாக் 4.0: எதற்கெல்லாம் அனுமதி

 மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அன்லாக் 4.0 புதிய வழிகாட்டுதல்களில், செப்டம்பர் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது உள்ளிட்ட சில குறிப்பிடத்தக்க தளர்வுகளை அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அன்லாக் 4.0 ஊரடங்கு தளர்வுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குதல், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு 50% ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை மீண்டும் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்பன உள்பட சில குறிப்பிடத் தக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஒவ்வொரு கட்டமாக கொரோனா வைரஸ் பொதுமுடக்கத் தளர்வுகலை அறிவித்து வருகிறது. அரசின் நான்காவது கட்ட தளர்வில், நோய்க் காடுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் மத்திய அரசின் அனுமதி இன்றி ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் பெரிய அளவிலான சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார, சமய, அரசியல் விழாக்களுக்கும் கூட்டங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது. ஆனால், அந்த கூட்டங்களில் அதிகபட்சம் 100 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என நிர்ணயித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நடைபெறும் திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கான வழிகாட்டுதல்கள் செப்டம்பர் 20ம் தேதி வரை அப்படியே தொடரும். திருமணங்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், இறுதிச் சடங்குகளில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கு ஆதரவாக இல்லாததால், பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30ம் தேதி வரை மூடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், செப்டம்பர் 21ம் தேதி முதல், நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைக்கலாம் என்றும் 9 முதல் 12 வகுப்பு மூத்த மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துகொள்ள வகுப்பறைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில், ​​திறந்தவெளி அரங்குகளை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது.

அன்லாக் 4.0 தடை செய்யப்பட்ட செயல்பாடுகள் மற்றும் தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அன்லாக் 4.0 வழிகாட்டுதல்கள்: எதற்கெல்லாம் அனுமதி?

மெட்ரோ ரயில் சேவைகள் 2020 செப்டம்பர் 7ம் தேதி முதல் தரப்படுத்தப்பட்ட முறையில் மீண்டும் தொடங்கும்.

சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார, சமய, அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். அதில் அதிகபட்சம் 100 பேர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கண்டிப்பாக முகக் கவசம் அணிவது, சமூக விலகலைக் கடைபிடித்தல், வெப்ப பரிசோதனை விதிகள் உட்பட – கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும்.

செப்டம்பர் 21ம் தேதி முதல் திறந்தவெளி அரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.

நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் கற்பித்தல் தொடர்பான பணிகளுக்காக செப்டம்பர் 21ம் தேதி முதல் 50% வரை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பள்ளிகளுக்குத் திரும்ப மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அனுமதிக்கலாம்.

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகளில் இருந்து 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் செப்டம்பர் 21ம் தேதி முதல் தன்னார்வ அடிப்படையில் தங்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் தங்கள் ஆசிரியர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் பொதுமக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்க கூடாது. அது போன்ற போக்குவரத்து செயல்பாடுகளுக்கு தனியான அனுமதியோ அல்லது இ-பாஸ் அனுமதியோ தேவையில்லை.

அன்லாக் 4.0 வழிகாட்டுதல்கள்: எதற்கெல்லாம் அனுமதி இல்லை

பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 30ம் தேதி வரை மாணவர்களுக்கு மூடப்படும். ஆன்லைன் மற்றும் தொலைதூர வழியிலான கற்பித்தல் கற்றல் தொடரும்.

மத்திய அரசின் அனுமதியின்றி கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த அனுமதிக்கப்படாது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், அரங்குகள் போன்ற இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட விமானப் பயணங்களைத் தவிர மற்ற சர்வதேச விமானப் பயணங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அத்தியாவசிய மற்றும் சுகாதார தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கான அன்லாக் 4.0 வழிகாட்டுதல்கள்:

செப்டம்பர் 30ம் தேதி வரை கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.

நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அந்த இடங்கள் மத்திய சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வரையறுக்கப்படும். அப்பகுதிகளில் கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும். அப்பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் வலைத்தளங்களில் அறிவிக்கப்படும். அவை பற்றிய தகவல்கள் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் பகிரப்படும்.