வியாழன், 20 ஆகஸ்ட், 2020

கொரோனா தடுப்பு மருந்து மலிவான விலையில் கிடைக்குமா?

 நாவல் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து செயல்பாட்டுக்கு வந்தவுடன், தனது குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து  தடுப்பு மருந்தை  அணுகுவதற்காக ஆஸ்திரேலியா அரசு, அஸ்ட்ராஜெனெகா பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் பன்னாட்டு மருந்து மற்றும் உயிர் மருந்துத் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

” இது வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், நாங்கள் எங்கள் சொந்த முயற்சியின் கீழ் உடனடியாக தடுப்பு மருந்துகளை தயாரித்து,  25 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு இலவசமாக வழங்குவோம்,” என்று ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஒரு பிபிசி அறிக்கையில் மேற்கோளிட்டுள்ளார்.

 விலை விவரங்களை கேட்கும் மத்திய அரசு :  

தற்போது, நாட்டில் மனித பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ள மூன்று   நிறுவனங்களும், அந்தந்த தடுப்பு மருந்து கிடைக்கக்கூடிய விலை விவரங்களை  வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக்கின் கோவாக்சின்  மற்றும் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி (ZyCov-D)  ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்கள் மருத்துவப் பரிசோதனைகளின் முதலாவது, இரண்டாவது கட்டப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

மூன்றாவதாக, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் – ஆஸ்ட்ரா ஜெனிக்கா கொரோனா தடுப்பு மருந்தை (கோவிஷீல்ட்) இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களில் மருத்துவமனை சார்ந்து பரிசோதித்துப் பார்க்க பூனாவில் உள்ள சீரம் ஆராய்ச்சி நிலையத்திற்கு இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் (டி.சி.ஜிஐ) அனுமதி அளித்தார்.

 

நிதிஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பபு மருந்து நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவில், மூன்று தடுப்பு மருந்துகளும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், முடிவுகள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

“விலை நிர்ணயம் என்பது மிகவும் சிக்கலானது. ஏனெனில் சில தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தற்போது ஆரம்ப கட்டத்தில் (வளர்ச்சியின்) உள்ளன. நாளாக, இந்த நிலை வேறுபடும். உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும், இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், புனே; பாரத் பயோடெக், ஹைதராபாத்; ஜைடஸ் கேடிலா, ஆமதாபாத்; ஜென்னோவா பயோ பார்மசூட்டிகல்ஸ், புனே; மற்றும் பயலாஜிக்கல் இ, ஹைதராபாத் போன்ற தனிப்பட்ட உற்பத்தியாளர்களிடமிருந்து விலை வரம்பைப் பற்றி  நாங்கள் கேட்டுள்ளோம், ”என்று வி.கே. பால் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும்? வேலூர் சி.எம்.சி மருத்துவ நிபுணருடன் உரையாடல்: 

 

உலகின் அதிககளவு தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் புனே-பேஸ் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பில் & மிலின்டா கேட்சு அறக்கட்டளையுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், கொரோனா தடுப்பு மருந்தின் ஒரு டோஸ் சுமார் 240 ரூபாய்க்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் .

இந்த ஒப்பந்தத்தின்படி, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பு மருந்தை வழங்கும் விதமாக, வெற்றிபெறும் ஏதேனும்  ஒரு தடுப்பு மருந்தை  100 மில்லியன் டோஸ்கள் அளவிற்கு சீரம் இன்ஸ்டிடியூட்  உற்பத்தி செய்யும்.  இதில்,  50 சதவீதத்துக்கும் அதிகமான தொகுப்பு மருந்துகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 டிசம்பர் மாதத்திற்குள் கிடைக்கும் சீனா:    

சீன அரசு மருந்து நிறுவனமான சினோபார்ம், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பு மருந்து  பொது பயன்பாட்டிற்கு தயாராக இருக்கும் என்றும்,  இந்த இரண்டு முறை போடப்படும் இந்த மருந்து சீன மதிப்பில் 1000 யுவானுக்கு குறைவாகச் செலவாகும் (இந்திய மதிப்பு கிட்டதட்ட ரூ.10,000 ) என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்தது.

சினோபார்ம் நிறுவனம் தயாரிக்கும் இந்த ‘Ad5-nCov5’ தடுப்பு மருந்து, தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் மூன்றாவது கட்டம் மருத்துவ பரிசோதனைகளில் உள்ளது. தடுப்பூசிகளுக்கான மனிதப் பரிசோதனை கட்டத்தை எட்டிய  சீனாவின் 6-வது  தடுப்பூசி இதுவாகும்.

மற்றொரு செய்தியாக, கேன்சினோ உயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துக்கு சீனாவின் தேசிய அறிவுசார் சொத்து நிர்வாகம் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனைகள் முடிக்கப்படும் முன்னே, சீன ராணுவ வீரர்களுக்கு மருந்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. இதன் மூன்றாவது கட்ட பரிசோதனையை சவூதி அரேபியா மற்றும் மெக்சிகோவில் தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.