திருச்சியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பெரம்பலூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி லுவாங்கோ அடைக்கலராஜ் என்பவர் போதைப் பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் லுவாங்கோ அடைக்கலராஜ் இவர் 2012-13ம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்துள்ளார். அதன் பிறகு, 2017-ம் ஆண்டு அவருக்கு பாஜகவில் பெரம்பலூர் மாவட்ட பாஜக செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு லுவாங்கோ அடைக்கலராஜ்ஜுக்கு பாஜகவில் பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவர் பதவியும் மாநில அளவில் ஓ.பி.சி பிரிவு செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு திருச்சியில் போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, திருச்சி ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி செந்தில்குமார், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. காமராஜ் ஆகியோர் இணைந்து செவ்வாய்க்கிழமை மதியம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மருத்துவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில், காரில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 1.8 கிலோ அபின் போதைப் பொருளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றினர்.
காரில் போதைப் பொருள் கடத்தி வந்த பெரம்பலூரைச் சேர்ந்த லுவாங்கோ அடைக்கலராஜ் என்கிற மாணிக்கம், திருச்சி மாந்திரி மங்களத்தைச் சேர்ந்த மாதடையான், அவர்களது கூட்டாளிகள் கூட்டாளிஆறுமுகம், ஜெயப்பிரகாஷ், பாலசுப்ரமணி உள்பட 5 பேர்களை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பெரம்பலூரில் இருந்து மதுரைக்கு போதைப்பொருள் கடத்தியது தெரியவந்தது. மேலும், கைதான லுவாங்கோ அடைக்கலராஜ் பாஜகவில் பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவராகவும், மாநில அளவில் பாஜகவின் ஓ.பி.சி பிரிவு செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிப்பது தெரியவந்தது.
மேலும், விசாரணையில், கார் பெரம்பலூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு சொந்தமானது என்பதும் திருச்சிக்கு ஆலோசனை கூட்டம் ஒன்றில் பங்கேற்க, வந்திருந்த மருத்துவரிடம், அடைக்கலராஜ் தனது காரை கொடுத்து விட்டு, மருத்துவரின் காரை எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது .
மேலும், இந்த போதைப்பொருள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்துள்ளது என்பதும், பெரம்பலூரைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் மூலம் அது தங்களுக்கு கிடைத்தாகவும் பிடிபட்டவர்கள் கூறியுள்ளனர்
கைது செய்யப்பட்ட லுவாங்கோ அடைக்கலராஜ் உள்பட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சியில் பாஜக நிர்வாகி லுவாங்கோ போதைப் பொருளில் கடத்தல் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சிகள் பலரும் குறிப்பிட்டு விமர்சனம் செய்தனர். இதையடுத்து, பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், “கட்சியின் பெயருக்கும் நற்பெயருக்கும் கலங்கம் விளைவிக்கும்படி நடந்துகொண்டதால் லுவாங்கோ அடைக்கலராஜ் பாஜகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளார்.