வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ., டுவீட்டால் பரபரப்பு

 தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் கொரோனா சோதனைகள் தொடர்பாக கவர்னர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ள கருத்து, அவர் மாநில கவர்னரா அல்லது பாரதிய ஜனதா கட்சி தலைவரா என்ற சந்தேகத்தை எழுப்புவதாக ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்எல்ஏ சைதி ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா சோதனைகள் சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை சோதனைகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தனியார் டிவி சேனலுக்கு, கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்திருந்தார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஹூசுர்நகர் தொகுதி எம்எல்ஏ சனம்புடி சைதி ரெட்டி, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் கூட அதிகளவில் சோதனைகள் மேற்கொள்ளப்படுவது தெலுங்கானா மாநிலத்தில் தான். முதல்வர் சந்திரசேகர ராவ் மேற்கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களை காப்பி அடிக்கின்றன. மற்ற மாநிலங்களுக்கு நமது முதல்வர் ரோல்மாடலாக திகழ்கிறார்.. கவர்னர் தமிழிசையின் கருத்தை பார்க்கும்போது, அவர் தெலுங்கானா மாநில கவர்னரா இல்ல பாரதிய ஜனதா கட்சி தலைவரா என்ற சந்தேகம் எழுவதாக அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவில், சைதி ரெட்டி, அமைச்சஅ கே.டி. ராமா ராவ் மற்றும் எம்.பி. சந்தோஷை டேக் பண்ணியிருந்தார்.

டுவிட்டர் பதிவு நீக்கம் : இந்த டுவிட்டர் பதிவு, தெலுங்கானா அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித்தலைமையின் உத்தரவுப்படி, சைதி ரெட்டி, அந்த டுவிட்டர் பதிவை நீக்கிவிட்டார். டிஆர்எஸ் கட்சியின் இந்த உத்தரவுக்கு மாநில பாரதிய ஜனதா கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

முதல்வர் சந்திரசேகர ராவிற்கும், கவர்னர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் இடையே நல்லுறவு நீடித்து வரும் நிலையில், அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியால், முதல்முறையாக இந்த உறவில் பிணக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.