வியாழன், 27 ஆகஸ்ட், 2020

காங்கிரஸ் கட்சியின் மீட்சி தேச நலன் சார்ந்தது: தலைவர்கள் கருத்து

 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் போது, கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தெரிவித்தார். எனவே, அதுவரை கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே தொடருவார் என்று செயற்குழு கூடத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் முதன்முதலில் செய்தி வெளியிட்டப்படி, காங்கிரஸ் கட்சியின் கூட்டுத் தலைமைக்கு நிறுவன ரீதியான பொறிமுறையை (institutional mechanism) உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அக்கடிதம் முன்வைத்தது. திங்களன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் கடிதம் தொடர்பான விவாதம் எழுந்தாலும்,  கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு நிலைப்பாடும் எட்டப்படவில்லை.


இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய அவர், ” காரிய கமிட்டி கூட்டத் தொடரில் கட்டாயம் நடைபெறும் போது, கட்சித் தலைமைக்கான தேர்தல் நடைபெறும். உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தேர்தலில் பங்கு பெறலாம். காங்கிரஸ்  மிகுந்த ஜனநாயாகத் தன்மையோடு விளங்கும் வெளிப்படையான ஒரு அரசியல் கட்சி” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, மணிசங்கர் அய்யர், கடிதத்தில் குறிபிட்டப்பட்ட உள்ளடக்கங்களை ஆதரிப்பதாக தெரிவித்தார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், “கடிதத்துக்கு நான் ஆதரவளிக்கிறேன். மிகவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் இருப்பதாக உணர்கிறேன். ராகுல்,சோனியா காந்தி தொடர்பான கருத்துக்கள் எதுவும்  இல்லை என்பதால், கடிதத்தோடு என்னால் ஒத்துப் போக முடிகிறது. கையொப்பம் இடுமாறு  நான் கேட்டுக் கொள்ளப்படவில்லை. யாரும் என்னை அணுகவில்லை.  கடிதத்தை நான் இன்னும் பார்க்க கூடவில்லை. கட்சியின் உயர் தலைமைக்கு எனது  விருப்பத்தை தனிப்பட்ட முயற்சியாக தெரிவித்தேன்” என்று அவர் தெரிவித்தார்.

சோனியா காந்திக்கு தனது ஆதரவு இன்றுவரை தொடர்வதாக வீரப்ப மொய்லி தெரிவித்தார். கட்சி என்று ஒன்று இருந்தால், அதற்கு தலைவர் ஒருவர் இருக்க வேண்டும். ஆனால், கட்சி பல மட்டங்களில் சரிவை சந்தித்து வரும்  கட்டத்தில், அதன்  தலைமை தன்னிச்சையாக வலுப்பெற முடியாது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, கட்சியின் மூத்த தலைர் கபில் சிபல் தனது ட்விட்டரில் தனது கருத்தை மறைமுகமாக பதிவிட்டார். “இது ஒரு பதவியைப் பற்றியது அல்ல, எனது நாட்டைப் பற்றியது” என்று  தனக்கு எதிரான அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

 

இதற்கிடையே, கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான விவேக் தங்கா சில கருத்துக்கள் ட்விட்டரில் முன்வைத்தார்.  அதில், ” நண்பர்களே, நாங்கள் எதிர்ப்பாளர்கள் அல்ல, மீட்சியை ஆதரிப்பவர்கள். இக்கடிதம் தலைமைக்கு விடுக்கப்பட்ட  சவால் விடவில்லை. ஆனால், கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிககி. நீதிமன்றங்களாக இருக்கட்டும், பொது விவகாரங்களாக  இருக்கட்டும் உண்மைதான் சிறந்த பாதுகாப்பு. வரலாறு  துணிச்சலை ஒத்துக்கொள்கிறது, கோழைத்தனத்தை அல்ல” என்று தெரிவித்தார்.

இந்த கருத்தை ஏற்றுக் கொள்வதாக, மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் ட்விட்டர் மூலம் விவேக் தங்காவுக்கு பதில் அளித்தார். தனது பதிவில், ” நன்றாக கூறப்பட்டது. கடிதத்தை குற்றமாக பாரப்பவர்கள் அனைவரும், கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானது என்பதை நிச்சயம் ஒருநாள்  உணருவார்கள்”என்று தெரிவித்தார்.

“சோனியா காந்தியின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கடிதம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் விவாதம் தேவையற்ற திசையில் சென்றது. உண்மையில், சோனியா காந்தியை அவர்கள் தான்  பலவீனப்படுத்தி விட்டார்கள்” என்று வீரப்ப மொய்லி கூறினார்.

கட்சியைப் பிளவுபடுத்தி குளிர்காய வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிலர் தான் எங்கள் விசுவாசத்தை கேள்வி எழுப்பினர். கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியை எங்கள் கடிதம் நோக்கமாக கொண்டுள்ளது என்று மொய்லி தெரிவித்தார்.  திங்களன்று நடந்த செயற்குழு கூட்டத்தில்,கடிதத்தில் உள்ள உள்ளடக்கங்கள், விவாதிக்கப்படவில்லை என்று தனக்கு கூறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“கடிதத்தின் நோக்கம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கடிதத்தை பலர் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். எங்களுக்கு எதிரான பிரச்சாரத்தால் இனைந்து கொண்டனர்.  கட்சியின் மீட்சி தற்போது இல்லையென்றால் பின் எப்போது? 2024 மக்களவை தேர்தலுக்குப் பிறகா? 2024ம் ஆண்டு தேர்தலுக்கு நம்மை துரிதப்படுத்திக் கொள்ள வேண்டும்,”என்று மொய்லி கூறினார்.

“கட்சிக்கு ஒரு மாற்றம் தேவையா ? அனைத்து மட்டத்திலும் கட்சி புதுப்பிக்கப்பட வேண்டுமா? என்பது தான் தற்போதைய முக்கிய கேள்வி.  ‘ஆம்’ என்பது தான் எளிய பதில். இது காலத்தின் தேவை. நாட்டில்  பாஜக, காங்கிரஸ் என்ற இரண்டு தேசிய கட்சிகள் மட்டும் தான் உள்ளன. தேசியக் கட்சிகளில் ஒன்று சரிந்தால், ஜனநாயகத்தின்  மாண்பு கேள்விக்குறி ஆகாதா ? காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மீட்சி தேசத்தின்  நலன் சார்ந்தது,” என்றும் தெரிவித்தார்.