இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அந்தரங்க தகவல்களை சேகரிக்கும் திட்டம் குறித்த வரைவறிக்கை மீது கருத்து தெரிவிக்க ஒருவார காலம் மட்டுமே மத்திய அரசு அவகாசம் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு தழுவிய சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதன் முதல் படியாக “தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம்” நாட்டின் 74வது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு தனி நபரின் உடல்நிலை குறித்த தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் சுகாதாரப் பதிவேடுகள், சுகாதாரப் பணியளர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சுகாதார கட்டமைப்பு வசதிகள் பற்றிய தகவல்கள் போன்றவற்றை திரட்டி பாதுகாத்து வருவதன் மூலம் ஒவ்வொரு இந்தியரின் சுகாதாரத் தேவையை எளிதாகப் பூர்த்தி செய்வதற்கு இந்த திட்டம் வழிவகுக்கும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி நாட்டின் ஒவ்வொரு தனி நபரின் மருத்துவ மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். அவை ஏற்கெனவே உள்ள தனிப்பட்ட அடையாள எண்ணான ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு ஒவ்வொரு நபருக்கும் ஒரு புதிய மருத்துவ அடையாள எண் தரப்படும். எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் இந்த அடையாள எண்ணைக் கொடுத்தால் நமது மருத்துவம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை அந்த மருத்துவமனை அறிந்துகொள்ளமுடியும். இதனால் விரைவாகவும் மிகச் சரியாகவும் சிகிச்சை அளிக்க இந்த திட்டம் பயன்படும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டமானது ஏற்கெனவே நாட்டின் மத்திய பொது சுகாதார காப்பீட்டுத் திட்டமான “ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா”-வை செயல்படுத்திவருகிற தேசிய சுகாதார ஆணையத்தால் (NHA) செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் தான் கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி இத்திட்டத்தின் முக்கிய அம்சமான நாட்டு மக்களின் சுகாதாரத் தகவல்களை மேலாண்மை செய்வதற்கான வரைவறிக்கை (Health Data Management Policy) பொது மக்களின் கருத்து கேட்பிற்காக வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கை தனிநபர் பற்றிய தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படும், சேகரிக்கப்பட்ட தகவல்கள் எவ்வாறு சேமிக்கப்பட்டு பகிரப்படும் என்பதற்கான நடைமுறையை விளக்குகிறது. மேலும் இந்த அறிக்கையானது, சேகரிக்கப்படும் முக்கியமான தனிநபர் தகவல்கள் என்பது ஒருவருடைய மருத்துவ தகவல்கள் மட்டுமல்லாமல் அதாவது உடல் மற்றும் மன நலம் பற்றிய தகவல்கள் மட்டுமல்லாமல், அவருடைய வங்கி கணக்கு, அவரிடம் உள்ள கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றை உள்ளடக்கிய நிதித் தகவல்கள், பாலினம் மற்றும் பாலினத் தேர்வு பற்றிய தகவல்கள், பாலியல் வாழ்க்கை குறித்த தகவல்கள், மரபணு குறித்த தகவல்கள் மற்றும் ஒருவருடைய சாதி, மதம், அரசியல் நம்பிக்கைகள் குறித்த தகவல்களும் இடம்பெறும் என்று குறிப்பிடுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய, மாநில மற்றும் சுகாதார அமைப்புகள் என மூன்று அடுக்குகளாக சேமிக்கப்படும். மேலும் தனிநபர் குறித்த தகவல்கள் மீதான உரிமைகள் அவருக்கே உள்ளன என இந்த அறிக்கை கூறினாலும் அந்த தகவல்கள் பிற்காலத்தில் ஆராய்ச்சிகளுக்காகவும், புள்ளிவிவர பகுப்பாய்வுகளுக்காகவும், திட்டங்கள் வகுக்கவும் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகம் எழுப்பப்படுகிறது. அத்தோடு மருத்துவம் சார்ந்த தகவல்களில் எதற்காக ஒருவரின் அரசியல் பார்வை, பாலின தேர்வு, சாதி போன்ற தனிப்பட்ட விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
ஆதார் எண்ணில் இருக்கும் தனிமனித தகவல்களே பாதுகாப்பாக இல்லை என குற்றச்சாட்டுகள் வரும் போது மருத்துவ தகவல்கள் எந்தளவிற்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் வினாக்கள் எழுப்பப்படுகின்றன. இதுகுறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இந்து பூஷன் பேசும்போது, “இந்தியர்களின் சுகாதாரம் பற்றிய தகவல்களை ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவருவதற்கான முதல் அடிதான் சுகாதாரத் தகவல்களை மேலாண்மை செய்வதற்கான வரைவறிக்கை. இதில் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இவ்வளவு அம்சங்களை கொண்டுள்ள இந்த வரைவறிக்கையை படித்து மக்கள் தங்கள் கருத்துக்களை சொல்வதற்கு ஆகஸ்டு 26ம் தேதி முதல் செப்டம்பர் 3ம்தேதி வரை மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் இயக்குனர் திரு. சுந்தரராமன் பொதுமக்கள் கருத்துக்கு ஒருவாரமே கொடுத்துள்ளது மிக அபத்தமானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ”நமக்கு ஏற்கனவே ஆதார் அடையாள எண் உள்ளது. புதியதாக இந்த மருத்துவ அடையாள எண் யார் கேட்டார்கள்? இந்த எண்ணின் நோக்கம் என்ன? இந்த பணியை மேற்கொள்ளும் துறை மத்திய சுகாதாரத்துறைக்கு வெளியே இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? இந்த டிஜிட்டல் திட்டம் முழுவதும் கார்ப்பரேட்டுகள் எனப்படும் பெரு நிறுவனங்களின் வருகைக்காக வழங்கப்படும் கட்டமைப்பு” எனவும் கூறியுள்ளார்.
இந்த டிஜிட்டல் சுகாதாரத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள நெறிமுறைகள் குறித்து ஏற்கெனவே பல கேள்விகள் எழும்பியுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்களும், அதனால் ஏற்படும் மரணங்களும் நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பின் அவசியத்தை உணர்த்தியுள்ளன. இந்நிலையில் இந்தியாவின் சுகாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு நாட்டின் அனைத்து மக்களுக்கும் எளிதில் கிடைக்கக்க்கூடிய அளவில் மருத்துவ வசதிகளை உருவாக்காமல், பெரு நிறுவனங்களின் ஆர்வத்தை கவனத்தில் கொண்டு அவர்களுக்காக தகவல்கள் சேகரித்து கொடுக்கிறதா இந்த திட்டம் என சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து ஆதார் வழக்குகளில் மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் திரு. பிரசன்னா, “உலகம் முழுக்க கொரோனா பரவி வரும் இந்த நேரத்தில் மக்களைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது கடினமான காரியம். இந்தச் சூழலைப் பயன்படுத்தி இது போன்ற அறிக்கைகள் வெளியிடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது” என குறிப்பிட்டுள்ளார். மேலும் “மக்களின் கருத்துக்காக ஒருவாரமே கால அவகாசம் கொடுத்திருப்பது பயனுள்ள வகையில் கணிசமான ஆலோசனைகளைப் பெறுவதற்கு அல்லாமல் வெறும் கண்துடைப்புக்காக செயல்படுவது பட்டவர்த்தனமாகிறது” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் மிக அவசரமாக இந்த திட்டத்தை செயல்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக அவகாசம் குறைவாக இருந்தாலும் வரைவை முழுமையாக படித்துவிட்டு கருத்து தெரிவிக்கவேண்டியது மக்களின் கடமை. செப்டம்பர் 3க்குள் படித்துவிட்டு கருத்து சொல்லவேண்டிய வரைவின் இணைப்பு. https://ndhm.gov.in/health_management_policy