புதன், 19 ஆகஸ்ட், 2020

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சில ஜூஸ் வகைகள்!

 நீரிழிவு நோயாளிகள் தினமும் குடிப்பதற்கு ஏற்ற வகையிலான சில ஜூஸ் வகைகளை இங்கே காண்போம். 

இயற்கையான உணவுகள் உங்களை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும். அந்த வகையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சில  ஜூஸ் வகைகள் உள்ளன. அவை உங்கள் உடலை மற்ற தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது. அதன் செய்முறையையும், மருத்துவ குணங்களையும் தற்போது பார்ப்போம்.

பாகற்காய் சாறு:

Bitter
உங்களுக்கு தேவையான அளவு பாகற்காய் எடுத்து அதில் உள்ள விதைகளை அகற்றி விடுங்கள். அதனை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுங்கள். உடலில் ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதற்கு இந்த சாறு உதவும். ரத்த சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் கண்டிப்பாக இதனை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பண்பு இதற்கு உண்டு.

கீரை சாறு:

Spinach
கீரையை நன்றாக கழுவி அதில் உள்ள பெரிய தண்டுகளை நறுக்கி விடுங்கள். அதன்பிறகு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். காலை நேரத்தில் இதனை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் கீரைகள் சாப்பிடுவது நல்லது. இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்ல பலனை தரும்.

நெல்லிக்காய் சாறு:

Amla
நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதில் மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து பருகுங்கள். ஆயுர்வேதத்தின்படி, உயர் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நெல்லிக்காய் ஒரு பாரம்பரிய தீர்வாகும். இதில் உள்ள கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் இதில் காணப்படும் சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பலனை தரக்கூடியது.

கற்றாழை சாறு:

Aloevera
கற்றாழையை நன்றாக கழுவி உலர வைத்துக் கொள்ளுங்கள். அதனை இருபுறமும் வெட்டி உள்ளே உள்ள ஜெல் போன்ற பகுதியை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனை தண்ணீருடன் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும். ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் கற்றாழை சிறந்த பங்காற்றுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை அதிக பலனை தரும் என்பது உறுதி.