ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

மேகாலயாவில் 4 மாதங்களில் 877 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

 மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் 61 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 877 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஒட்டுமொத்த நாடும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு முக்கியத்துவம் அளித்து வரும் சூழலில், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு போதிய மருத்துவ வசதி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

4

இந்நிலையில் மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் 61 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 877 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். போதிய மருத்துவ வசதி கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவ கவனிப்பு இல்லாமை, நிமோனியா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் புதிதாக பிறந்த குழந்தைகள் இறப்பை சந்திக்கின்றனர். 

இதுதொடர்பாக பேசிய சுகாதார இயக்குநர் அமன் போர், ‘கொரோனா தொற்று காரணமாக மாநில சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் திசை திருப்பப்படுவதால், தாய்- சேய் இறப்பு விகிதம் அதிகம் உயர்ந்துள்ளது கவலைக்குரியது. போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், மருத்துவமனையில் அனுமதி கிடைக்காத கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பை சந்தித்துள்ளனர். கர்ப்பிணி பெண்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வந்தாலும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படக் கூடாது என மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து கர்ப்பிணி பெண்களும் அருகில் உள்ள சுகாதார மையத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.