செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

மந்த நிலையை தவிர்க்க முடியாது: பொருளாதாரத்தை மீட்க மன்மோகன் சிங் கூறும் 3 வழிகள்

 இந்தியாவில் “ஆழமான மற்றும் நீடித்த பொருளாதார மந்தநிலை” தவிர்க்க முடியாதது என்று வலியுறுத்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், கொரோனா தொற்று நோயின் மோசமான தாக்கத்தைக் கட்டுப்படுத்த, நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொள்ள வேண்டிய மூன்று உடனடி நடவடிக்கைகளையும் விவரித்தார்.

பிபிசியுடனான ஒரு மின்னஞ்சல் உரையாடலில்,”நாட்டில் பொருளாதார மந்தநிலை ஒரு மனிதாபிமான நெருக்கடி என்று தெரிவித்த மன்மோகன் சிங், ஊரடங்கு அமல்படுத்தியதில் அரசின் அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு அணுகுமுறை ( Shock and awe) மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது” என்று கூறினார். ஒருவேளை அந்த கட்டத்தில் ஊரடங்கு தவிர்க்க முடியாத தேர்வாக இருக்கலாம். இருப்பினும், அறிவிக்கப்பட்ட விதமும், அதனால் ஏற்பட்ட கடுமையான தாக்கங்கள் அனைத்தும்  சிந்தனையற்ற, உணர்ச்சியற்ற தன்மையில் இருந்தன”என்று சிங் கூறினார்.

வரும் ஆண்டுகளில் பொருளாதார இயல்புநிலையை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த மன்மோகன் சிங், மூன்று நடவடிக்கைகளையும் முன்வைத்தார்.

சிங்கின் கூற்றுப்படி, “மக்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். நேரடி நிதி ஆதரவு மூலம் மக்களின்  செலவழிக்கும் திறனை அதிகரிக்க முடியும்.  அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட  கடன் உத்தரவாத திட்டங்கள் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு போதுமான மூலதனத்தை மத்திய அரசி கிடைக்கச் செய்ய வேண்டும். கடைசியாக, நிறுவன சுயாட்சி மற்றும் செயல்முறைகள் மூலம் நிதித் துறையை அரசாங்கம் சரிசெய்ய வேண்டும்”என்று சிங் கூறினார்.

நேரடி பணப் பரிமாற்றம் குறித்து பேசிய மன்மோகன் சிங், ‘அதிக கடன்’ என்பதை  தவிர்க்க முடியாதது. இது, இந்தியாவின் கடனை  கடன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிக்கும் என்று ஒப்புக் கொள்கிறேன். இருப்பினும், உயிர்களையும், எல்லை பாதுகாப்பையும், வாழ்வாதாரங்களையும், தேசத்தின் பொருளாதார வளர்ச்சியையும் ‘அதிக கடன்’  மீட்டெடுக்கும் என்றால், நிச்சயம் அது மதிப்புமிக்கது” என்று கூறினார். “கடன் வாங்குவதில் வெட்கப்படக்கூடாது, ஆனால் அந்த கடனை  எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நாம் விவேகத்துடன் இருக்க வேண்டும்,” என்று பிபிசி மேற்கோளிட்டது.

“சில நாடுகள் பாதுகாப்புவாதத்தை நோக்கி ஊடுருவிக் கொண்டிருக்கும் வேளையில், அதிக வர்த்தக தடைகளை இந்தியா முன்னெடுக்கக் கூடாது என்று மன்மோகன் சிங் எச்சரித்தார். கடந்த மூன்று தசாப்தங்களாக இந்தியாவின் வர்த்தகக் கொள்கை “ பெரும் தொழில் நிறுவணங்களுக்கு மட்டுமல்லாமல், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் மகத்தான பொருளாதார பயன்களை கொண்டு சேர்த்தது”என்று அவர் தெரிவித்தார்.

இந்திய பொருளாதார வளர்ச்சி கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாகவே  போராடியது. 2019-20 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி  4.2% ஆக வளர்ந்தது. அதாவது, 11 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவான உற்பத்தி விகிதத்தை இந்தியா பதிவு செய்தது” என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இந்தியாவில், கொரோனா பொது முடக்கநிலையின் தாக்கங்களை களைய, சுயசார்பு பாரதத்துக்காக, 20 லட்சம் கோடி தொகுப்பு நிதியை மத்திய  நிதி அமைச்சகர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.