ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் மற்றும் கூரை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது ஆதிச்சநல்லூரில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை இயக்குனர் பாஸ்கர், ஆய்வாளர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பு மற்றும் வெண்கலத்தாலான பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் தற்போது 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் மற்றும் கூரை ஓடுகள் இங்கு கிடைத்துள்ளது. அந்த குறியீடுகளில் ஏணி, இலை போன்று வரையப்பட்டுள்ளது. கீறல்கள் மற்றும் குறியீடுகளை ஆய்வு செய்யும்போது பழங்கால மனிதர்களின் வாழ்வியல் குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு நடந்த அகழாய்வு பணியில் கரும்பு, மான், முதலை, பெண் உருவங்கள் இருந்த பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.