ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

“இந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் கருத்தரங்கை விட்டு வெளியேறுங்கள்” - ஆயுஷ் அமைச்சக செயலர்

 இந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் கருத்தரங்கை விட்டு வெளியேறுங்கள் என தமிழ்நாடு யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களிடம் மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா கூறியிருப்பது மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கான மூன்று நாள் ஆன்லைன் கருத்தரங்கம் மத்திய ஆயுஷ் மருத்துவ அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து 350 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து 37 யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

 

அப்போது இந்த கருத்தரங்கில் நடைபெற்ற வகுப்புகள் அனைத்தும் இந்தி மொழியிலேயே நடைபெற்றது. இதனால் தமிழகத்தில் இருந்து கலந்துகொண்டவர்கள் மொழி தெரியாமல் தவித்துள்ளனர். இந்நிலையில் மூன்றாவது நாள் உரையாற்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சாவும் இந்தியிலே பேசியுள்ளார். இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்தி புரியவில்லை என்றும் ஆங்கிலத்தில் உரையாற்றுமாறும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் வைத்யா ராஜேஷ், “இந்தி தெரியவில்லை என்றால் கருத்தரங்கை விட்டு வெளியேறுங்கள், ஆங்கிலத்தில் பேச முடியாது, எனக்கு ஆங்கிலம் தெரியாது” என கடுமையாக கூறியுள்ளார். 

 

இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சாவின் செயலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில், இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

ஏற்கெனவே இரு வாரங்களுக்கு முன்பு விமானநிலையத்தில் கனிமொழியிடம் இந்தியில் பேச தெரியாதா, நீங்கள் இந்தியர் தானே என ஒரு அதிகாரி கேள்வி எழுப்பியது சர்ச்சையை கிளப்பியது. 

 

கனிமொழியை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் இந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரதமணித்திருநாடு” என்று பதிவிட்டுள்ளார். 

 

அதைப்போல கவிஞர் வைரமுத்துவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.