செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ராகுல் காந்தியின் பரபரப்பு புகார்! - உண்மைதானா?

 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது ராகுல்காந்தி எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என செய்திதொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். 

கடந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு, ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார். ஆனால் கட்சிக்கு நிலையான தலைமை வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து தலைமை குறித்து உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என சோனியா காந்திக்கு கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சசி தரூர் உள்ளிட்டோர் கடிதம் எழுதியிருந்தனர். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. இதில் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி  உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தொடர தான் விரும்பவில்லை என்றும், கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சோனியாகாந்தி கூறியுள்ளார். 

சோனியா காந்தியே தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைமையில் மாற்றம் தேவை என சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்களுக்கு, பாஜகவுடன் தொடர்பு உள்ளதாக ராகுல் காந்தி கூறியதாக தகவல் வெளியானது. இதற்கு கபில் சிபல் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ராகுல்காந்தி இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என செய்திதொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார். ஊடகங்கள் மூலம் தவறான தகவல் பரப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார். மோடி ஆட்சியை எதிர்த்து போராடுவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மாறாக ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனையடுத்து ராகுல்காந்தி இதுபோன்ற கருத்தை தெரிவிக்கவில்லை என தனிப்பட்ட முறையில் விளக்கமளித்ததாகவும், அதனால் தனது ட்விட்டர் பதிவை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.