வியாழன், 13 ஆகஸ்ட், 2020

பி.இ, பி.டெக் செமஸ்டர் தேர்வுகள்: அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு

 ரத்து செய்யப்பட்ட பி.இ, பி.டெக். கல்லூரி பருவத் தேர்வுகளுக்கான மதிப்பெண் வழங்கும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

முன்னதாக, கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இறுதி ஆண்டு பருவத் தேர்வை தவிர்த்து, மற்ற கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கியைல், “செய்முறை அல்லாத பாடங்களில் சென்ற பருவத்தில் மாணாக்கர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில்லிருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தின் அக மதிப்பீ்டு ( இன்டர்னல் அசஸ்மென்ட் ) அல்லது தொடர்ச்சியான அகமதிப்பீட்டிலிருந்து 70 சதவீத மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்து 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும்” என்று தெரிவித்தது.

முந்தைய செமஸ்டரில் அக மதிப்பீட்டுத் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு தேர்வு மீண்டும் நடத்த வேண்டும். அத்தகைய மாணவர்களுக்கு திறந்த புத்தகத் தேர்வு அல்லது ஆன்லைன் வழியில் தேர்வுகளை நடத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

செய்முறை வகுப்புகள் கொண்ட பாடங்களுக்கு, கடந்த செமஸ்டரில் நடத்தி முடிக்கப்பட்ட செய்முறைகளின்படி 100 சதவீத மதிப்பெண்கள் அளிக்கப்படும்” என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

முன்னதாக,  இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் செப்டம்பர் இறுதிக்குள் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் கட்டாயம் நடத்த வேண்டும் என்று யுஜிசியின் திருத்தப்பட்ட வழிமுறைகளை தெரிவித்தன.