திங்கள், 24 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக்கொள்கை குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க உத்தரவு!

 புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது. 


நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கைக்கு கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அடுத்த ஆண்டே புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. புதிய கல்விக்கொள்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்க மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 


அதன்படி, இன்று முதல் வரும் 31ம் தேதி வரை, இதற்காக உருவாக்கப்பட்ட மத்திய அரசின் இணையதள பக்கத்தில் சென்று கருத்துக்களை பதிவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில பள்ளிக்கல்வி செயலாளர்களுக்கும், மத்திய கல்வி அமைச்சக செயலாளர் அனிதா கார்வால் கடிதம் எழுதியுள்ளார். கருத்துக்கள் தொடர்பாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன நிபுணர்கள் குழு ஆராய்ந்து முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.