மீண்டும் தமிழகத்தில் பேசு பொருளாகி இருக்கிறது இந்தி. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி போட்ட ஒற்றை ட்வீட் இந்தி தெரிந்தவர் மட்டும் தான் இந்தியரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், திமுகவின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழியைப் பார்த்து நீங்கள் இந்தியரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கேள்வியைக் கேட்ட இடம் சென்னை விமான நிலையம், கேட்டவர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர்.
தன்னிடம் இந்தியில் கேள்வி கேட்ட அந்த பெண் அதிகாரியிடம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேளுங்கள்; இந்தி எனக்குத் தெரியாது என கனிமொழி பதில் அளித்தபோதுதான், அந்த அதிகாரி, நீங்கள் இந்தியரா என கேட்டுள்ளார்.
தனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் கனிமொழி. அதோடு, இந்தி தெரிந்தவர்தான் இந்தியர் என்ற நிலை எப்போது ஏற்பட்டது என்றும் அவர் கேள்வியெழுப்பி இருந்தார்.
கனிமொழியின் இந்த கேள்வியை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது. இந்தி தெரிந்தவர்கள் மட்டும் தான் இந்தியர் என்பது இந்தி பேசாத மாநிலங்களின் இறையாண்மையை சிதைக்கும் செயல் என கொந்தளித்து வருகின்றனர் இணைய வாசிகள்.
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்று கிடையாது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அப்படியானால் விமான நிலையங்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடுவது ஏன்? என்ற கேள்வி பிரதானமாகிறது.
பிறமொழி பேசும் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம். விமான நிலையங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கும் ரயில் நிலையங்களிலும், தமிழ் தெரியாத அதிகாரிகள் அதிக அளவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுவது இங்கே நினைவு கூர வேண்டியுள்ளது.
கனிமொழியின் ட்விட் வெளியானதுமே பல்வேறு தரப்பினரும் தங்களுக்கும் இதுபோன்ற சிக்கல்கள் எழுந்ததாக ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற கசப்பான தனக்கும் நேர்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
இந்தி மட்டுமே தெரிந்த அதிகாரிகள் மூலமாக மறைமுகமாக இந்தி திணிக்கப்படுகிறதா என்ற வலைதளவாசிகளின் கேள்விக்கு விடைகாண வேண்டியது கட்டாயமாகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. வேற்றுமையில் ஒற்றுமை தான் நமது பலம். அந்த பலம் தொடர வேண்டுமானால், மாநில மொழிகளுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும் என்று கண்டன குரல்கள் எழுத் தொடங்கியுள்ளன.