வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பாஜகவின் வெறுப்பு கருத்துகளுக்கு எதிராக ஏன் முகநூல் நடவடிக்கை எடுக்கவில்லை?

  தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல் வெளியிட்ட செய்தி ஒன்றில் இந்தியாவில் இயங்கும் முகநூல் நிறுவனத்தின் பப்ளிக் பாலிசி எக்ஸ்க்யூட்டிவ் அதிகாரி பாஜகவினரின் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. பாஜகவுடன் தொடர்புடைய குழுக்கள் மற்றும் தனிநபர்கள் வெளியிட்ட வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் பதிவுகளுக்கு “ஹேட் ஸ்பீச் விதிகளை” (Hate Speech Rules) பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு இன்று ஆராய்கிறது.

இந்த பிரச்சனையை நிச்சயமாக ஆராய்ந்து, முகநூல் நிர்வாகத்தினரின் பதில்கள் குறித்தும் கேட்டறிவேன் என்று கூறியுள்ளார் இந்த நிலைக்குழுவின் தலைவர் சசி தாரூர். திங்கள் கிழமை அன்று இந்த குழுவின் செயலகம் முகநூலுக்கு கடிதம் ஒன்றை எழுத உள்ளது. மேலும் முகநூல் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்துள்ளது.

வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையில், முகநூலின் இந்திய பப்ளிக் பாலிசி இயக்குநர் அன்கி தாஸ், நிர்வாகிகளிடம், பாஜக அரசியல்வாதிகளின் வன்முறையை தூண்டும் பதிவுகளுக்கு நடவடிக்கைகள் மேற்கொண்டால் அது இந்தியாவில் முகநூலின் பிஸினஸை பாதிக்கும் என்று கூறியுள்ளார். முகநூலுக்கு அதிக பயனாளர்களை கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய சந்தை மையமாக இந்தியா திகழ்கிறது. சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் தெலுங்கானாவின் பாஜக எம்.எல்.ஏ. டி ராஜா சிங்கின் பேச்சு மீதான நடவடிக்கை குறித்து பேசும் போது, முன்னாள் மற்றும் தற்போது முகநூலில் வேலை பார்க்கும் அதிகாரிகள் பலரும், தாஸின் தலையீடு இருந்தது என்று கூறுகிறார்கள். மேலும் ஆளும் கட்சினருக்கு ஆதரவாக நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் சாதகவாதத்தின் ஒரு பங்காக இது விளங்குகிறது என்றும் கூறியுள்ளனர்.

பாராளுமன்ற கூட்டுக்குழு ஒன்றை அமைத்து இதனை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பு கூறியுள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் கூறுகையில், “ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஏ.பி.வி.பி. தலைவராக இருந்த ராஷ்மி தாஸூக்கும் அன்கி தாஸுக்கும் எந்த வகையில் தொடர்பு என்று நாங்கள் பாஜவிடம் கேட்க வேண்டும்” என்றார்.

மேலும், இந்த செய்தி அறிக்கையில், ஹேட்-ஸ்பீச்சுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் பிஸினஸ் வளர்ச்சிக்கு எவ்வகையான தடைகள் இருந்தது என்றும் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தை மதம், சாதி, மற்றும் பிராந்திய அடிப்படையில் மக்களை பிரித்தல் என்பது தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல். இதில் உங்களுக்கு ஏதேனும் ஒப்பந்தம் உள்ளதா? இதற்கு பதிலாக உங்கள் நிறுவனம் இந்தியாவில் மேலும் வளர்ச்சி அடைய ஏதேனும் உதவி கிடைக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாட்ஸ்ஆப் பே திட்டத்திற்கான உரிமத்திற்காக வாட்ஸ்ஆப் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த உரிமத்திற்கான ஒப்பந்தம் என்ன? நிபந்தனைகள் என்ன என்றும் மகென் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்பம் மற்றும் தரவுகளின் தலைவர் ப்ரவீன் சக்ரவர்த்தி மற்றும் சமூக வலைதள தலைவர் ரோஹன் குப்தா ஆகியோர் இணைந்திருந்தனர்.

ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் இந்தியாவில் முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப்பை கட்டுப்படுத்துகிறது என்றும் அவர்கள் பொய்யான தகவல்கள், மற்றும் வெறுப்பினை பரப்பி வருகின்றனர். அதன் மூலமாக தேர்தலில் ஆதாயம் அடைந்துள்ளனர். என்று ட்வீட் செய்திருந்தார். அதற்கு விமர்சனம் தரும் வகையில் மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் பதில் கூறியிருந்தார்.

பிரசாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தன் சொந்த கட்சி உறுப்பினர்களிடையே நற்பெயரை சம்பாதிக்காமல் தோல்வியுற்றவர்கள் தான் மொத்த உலகமே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறார். கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா மற்றும் முகநூலுடன் தரவுகளை பெறும் போது கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளீர்கள். நீங்கள் தற்போது எங்களை கேள்வி கேட்கின்றீர்கள் என்று பதில் ட்வீட் பதிவு செய்திருந்தார்.

பாஜக ஆதாரங்கள், “2019ம் ஆண்டு 700க்கும் மேற்ப்பட்ட முகநூல் பக்கங்கள், குழுக்கள் மற்றும் தனிப்பட்ட கணக்குகளை முடக்கியது. போலி கணக்குகளை முடக்கும் வகையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய நடவடிக்கைகளில் முகநூல், ஒருங்கிணைந்த உண்மையற்ற செயல்பாடுகளை இந்த பக்கங்களில் கண்டறிந்ததாக கூறியது. இதில் சில காங்கிரஸ் ஐடி செல்களும், சில்வர் டச் டெக்னாலஜிகளும், பாஜக மற்றும் அரசுக்காக பணியாற்றிய நிறுவனங்களும் அடங்கும்.

முகநூல் மற்றும் இதர சமூக வலைதள பக்கங்கள் இந்தியா மற்றும் அமெரிக்காவில் ஒருசார் நடவடிக்கைகளுக்காக அரசியல் ரீதியாக தாக்குதலுக்கு ஆளாகின. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் முகநூல் நிறுவனத்திற்கு சம்மன் வழங்கப்பட்டது. WSJ அறிக்கையைப் பற்றி கேட்டபோது, ஒரு பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் “வன்முறையைத் தூண்டும் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் உள்ளடக்கத்தை நாங்கள் தடைசெய்கிறோம், யாருடைய அரசியல் நிலைப்பாடு அல்லது கட்சி இணைப்பையும் பொருட்படுத்தாமல் உலகளவில் இந்தக் கொள்கைகளை நாங்கள் செயல்படுத்துகிறோம். இன்னும் பல விஷயங்கள் உள்ளன என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம், நாங்கள் அமலாக்கத்தில் முன்னேற்றம் அடைகிறோம், மேலும் நேர்மை மற்றும் துல்லியத்தை உறுதிப்படுத்த எங்கள் செயல்முறையின் வழக்கமான தணிக்கைகளை நடத்துகிறோம்” கூறினார்.

கூட்டு பாராளுமன்றக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டது தொடர்பாகவும் விவாதம் எழுந்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டுக்குழு என்பது ஆளும்கட்சிக்கானது. ஏன் என்றால் அக்கட்சி தான் தலைவரை தேர்வு செய்யும். ஐ.டி.கமிட்டிக்கு தான் இதற்கு அதிக பொறுப்புகள் இருக்கிறது. இந்நிலையில் ஏன் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://tamil.indianexpress.com/india/house-panel-to-ask-facebook-to-explain-inaction-on-hate-posts-linked-to-bjp-215184/