வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

என் உயிரை காப்பாற்றியது இஸ்லாமியர்கள் தான்… பெங்களூர் சர்ச்சை ட்வீட் செய்தவரின் தாயார் உருக்கம்!

 


பெங்களூருவில் சர்ச்சையை கிளப்பும் வகையில் நவீன் என்ற நபர் முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனால் அந்த பகுதியில் செவ்வாய் கிழமையன்று (11ம் தேதி) பெரும் கலவரம் மூண்டது. கார்கள், காவல்துறை வாகனங்கள், வீடுகள் அனைத்தும் தீக்கிறையாக்கப்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கிச்சூடு நடத்தியது காவல்துறை. இதில் 3 நபர்கள் உயிரிழந்தனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் சகோதரி ஜெயந்தியின் மகன் தான் அந்த சர்ச்சை பதிவை வெளியிட்டவர். இதனால் நவீனின் வீட்டை சுற்றிய போராட்டக்காரர்கள் கேட்டை உடைத்து வீட்டிற்குள்ளே வந்துள்ளனர். கார் கண்ணாடிகள் மற்றும் ஜன்னல்களை அவர்கள் சேதப்படுத்தினர்.

பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாடிக்கு ஓடி தன்னுடைய உயிரை பாதுகாக்க முயன்றிருக்கிறார் ஜெயந்தி. அப்போது அங்கு அக்கம் பக்கத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு வீட்டிற்குள் சென்று ஜெயந்தி மற்றும் அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் பத்திரமாக கார் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்கள் மிகவும் சரியான நேரத்தில் வந்திருக்கவில்லை என்றால் நான் உயிருடன் இருந்திருப்பேனா என்பது சந்தேகம் தான். அவர்கள் செய்த உதவியை என் வாழ்நாளுக்கும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார் அவர். மேலும் ஒரு முகநூல் பதிவிற்காக கலகம் ஏற்படுமா. அவர்கள் என் தம்பியை அரசியல் ரீதியாக அழிக்கும் நோக்கில் தான் கல்வரத்தை செய்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.