நீட், JEE தேர்வுகளை ஒத்திவைக்க கோரி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனாவால் மாணவர்களும், பெற்றோரும் பெரும் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். பொது போக்குவரத்திற்கு தடை உள்ளதால், மாணவர்கள் தேர்வு மையங்களை அணுகுவது கடினம் எனவும், மாணவர்களின் உயிரை பணயம் வைத்து எந்த முடிவையும் அவசர கதியில் எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுதுவோருக்கு கொரோனா தொற்று இருந்தால், மீண்டும் நாடு முழுவதும் நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்பதால், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனவும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல, மேற்குவங்க முதல்மைச்சர் மமதா பானர்ஜி, மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்றும், ஆபத்தை உணர்ந்து நீட், JEE தேர்வுகளை தள்ளிவைக்கக் கோரியும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், லட்சக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு விளையாடுவதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், இந்தாண்டு சேர்க்கைக்கு மாற்று வழி யோசிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநில சுற்றுச் சூழல் துறை அமைச்சரான ஆதித்யா தாக்கரே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் நுழைவுத் தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தமாக 1597433 பேர் தேர்வெழுத உள்ளனர். JEE தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.