புதன், 12 ஆகஸ்ட், 2020

பேஸ்புக் பதிவிற்கு எதிராகவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 பெங்களூருவில் நேற்று ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், 60க்கும் அதிகமான காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். 

பெங்களூருவின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினரான நவீன் என்பவர் சமூக வலைதளத்தில் ஒருசாராரின் மதம் தொடர்பான சர்ச்சை கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு பிரிவினர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.  மேலும் வீடு மற்றும் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியும், கதவு, ஜன்னல்களை உடைத்தும் சூறையாடினர். இதனையடுத்து காவல்நிலையத்தை அடைந்த அவர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நடந்த இச்சம்பவத்தால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. 

கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொரோனா பரிசோதனைக்கு பிறகே இறந்தவர்களின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான வன்முறையில் காவல்துறையினர் 60 பேர் காயமடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் சுமார் 200 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதனிடையே, நகரின் சில பகுதிகளில் வெடித்த வன்முறையை தொடர்ந்து பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட நவீனை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 11க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். தங்களது சமூக வலைதள பக்கத்தை யாரோ ஹேக் செய்து இதுபோன்று பதிவிட்டுள்ளதாக கைது செய்யப்பட்டோர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் பெங்களூரு கலவரத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர், ஊடகவியலாளர்கள், பொதுமக்களை தாக்கிய குற்றவாளிகளின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘பெங்களூருவில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நகரம் முழுவதும் கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை முழுவதுமாக கட்டுப்பாட்டில் உள்ளது’ என்றார்.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல்துறையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை கடுமையாக கண்டிப்பதாக ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பேஸ்புக் பதிவிற்கு எதிராகவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.