ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

தடுப்பு மருந்தால் மட்டும் கொரோனாவை ஒழித்துவிட முடியாது: WHO அதிர்ச்சி அறிக்கை

 அரசியல் லாபங்களுக்காக தரமற்ற, தகுதியற்ற கொரோனா தடுப்பு மருந்துகளை வெகுஜன செயல்பாட்டுக்கு கொண்டு வர நிர்பந்திக்கப்பட்டால், பதவி விலகுவேன் என்று உணவு, மருந்துப் பொருட்களின் கண்காணிப்பு மேற்பார்வையாக செயல்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (The Food and Drug Administration (FDA or )) மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக  ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நிர்வாகத்தின் உயிரியல் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் பீட்டர் மார்க்ஸ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம்,” எந்தவொரு கொரோனா தடுப்பு மருந்துக்கும் விரைவாக ஒப்புதலை வழங்க  இதுவரை அரசியல் அழுத்தம் கொடுக்கப்படவில்லை. ஆனால் இது நடந்தால், பணியில் இருந்து ராஜினாமா செய்ய தயங்க மாட்டேன்”என்று தெரிவித்தார்.

” பயனற்ற,பாதுகாப்பற்ற  தடுப்பு மருந்தை மக்களிடம் கொண்டு செல்வதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. உங்களுடைய வரம்பை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். என்னுடைய நிலைப்பாடு இதுதான். தவறு நடப்பது தெரிந்தால்,  அமெரிக்க மக்களுக்கு அதை கொண்டு செல்ல நான் கடமைப்பட்டுள்ளேன் ”என்றும் மார்க்ஸ் தெரிவித்தார்.

தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் வேகமும், முழு செயல்முறையை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவும்  விஞ்ஞானிகளுக்கு ஒருவித அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித பரிசோதனைகளில் முக்கியமானதாக கருதப்படும் மூன்றாம் கட்ட சோதனைகளை மேற்கொள்ளாமல், வெகுஜன  பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட  ரஷ்யாவின்  தடுப்பு மருந்து கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Coronavirus (COVID-19) vaccine tracker

தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் அதிபர் தேர்தலுக்கான  பிரச்சார மேடையில் கொரோனா தடுப்பு மருந்தை  தனது சாதனையாக முன்னெடுக்கலாம் என்ற அச்சமும் நிபுணர்கள் இடத்தில் உள்ளது. நவம்பர் 3 அதிபர் தேர்தலுக்கு, முன்னர் தடுப்பு மருந்து உருவாக்கப்படலாம் என்று டிரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தடுப்பூசிகள் எதுவும் 2021 க்கு முன்னர் வெகுஜனப் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்க வாய்ப்பில்லை என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெருந்தொற்றை தடுப்பு மருந்து மட்டும் முடிவுக்குக் கொண்டுவராது: உலக சுகாதார நிறுவனம்:  

இதற்கிடையே, கொரோன பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்து ஒரு’முக்கிய கருவியாக’ இருந்தாலும், ​​அது பெருந்தொற்றை தானாகவே முடிவுக்குக் கொண்டுவராது என்று  உலக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.

” தடுப்பு மருந்து முக்கிய கருவியாக இருக்கும். எதிர்பார்த்த தடுப்பு மருந்து விரைவில் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனாலும், இந்த தடுப்பு மருந்து பெருந்தொற்றை தானாக முடிவுக்கு கொண்டு வரும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை,”என்று டெட்ரோஸ் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“முகக்கவசங்களின் பயன்பாடு, சமூக விலகல் வழிமுறை போன்ற கொரோனா நோய் தொற்றுக்குப் பொருத்தமான தற்போதைய  நடத்தை மூலம் இந்த வைரசை நாம் கட்டுப்படுத்த  வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, நமது அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.  பல நாடுகளில், கொரோனா பரவலைக் கட்டுபடுத்துவதற்கும், சுகாதார கட்டமைப்பை அதிகரிக்கவும் ஊரடங்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது . ஆனால், அது    எந்தவொரு நாட்டிற்கும் நிரந்தர தீர்வாக அமையாது,” என்றும் தெரிவித்தார்.

“மனித வாழ்க்கையா…. வாழ்வாதாரமா? , சுகாதாரமா?…..   பொருளாதாரமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக நமது தேடல்கள் இருக்கக் கூடாது. இது தவறான  தேடல். மனித  ஆரோக்கியமும் பொருளாதாரமும் பிரிக்க முடியாது என்பதை தான் இந்த பெருந்தொற்று நினைவூட்டுகிறது.  உலக நாடுகள் அனைத்தும் தங்களது பொருளாதார நடவடிக்கைகளை  வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்ப உலக சுகாதார அமைப்பு உறுதிபூண்டுள்ளது. ஆனால், அதற்கு  ஒவ்வொரு நபரும்  ஒத்துழைக்க  வேண்டும். மாற்றங்களை தனிநபரிடம் இருந்து  உருவாக வேண்டும். ஒவ்வொரு நபரும், குடும்பமும், சமூகமும், தேசமும் அவர்கள் வாழும் இடத்தின் அளவின் அடிப்படையில் தங்களது சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும், ”என்று டெட்ரோஸ் கூறினார்.

மேலும், “பொருளாதார செயல்பாடுகளையும், சமூக கட்டமைப்பையும் பெருந்தொற்று மாற்றியமைத்துள்ளன என்பது தான் வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்த பாடம். இந்த கொரோனா பெருந்தொற்றும் அதைத் தான் நம்மிடம் போதிக்கிறது,”என்று  கூறினார்.