வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

நீட் தேர்வை நடத்தாவிட்டால், ஒரு கல்வி ஆண்டை இழக்க நேரிடும்:

 கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஜே.இ.இ முதன்மை மற்றும் நீட் தேர்வை  நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு  தரப்பில் எதிர்ப்புக் குரல் உருவாகியுள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில் நீட் தேர்வை நடத்தி முடிக்க வேண்டிய அவசியத்தை, உயர்கல்வி செயலாளர் அமித் கரே ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “நீட் தேர்வு முதலில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர், ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.  மேலும் சில நாட்கள் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று  ஏராளமான மாணவர்கள் கோரிக்கை விடுத்ததால், நீட் தேர்வு  செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டது. இப்போது, தீபாவளி வரை  தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒரு பிரிவு மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். தீபாவளிக்குப் பிறகு, நாட்டின் கிழக்குப் பகுதியில் சாத் திருவிழா (நவம்பர் 26) கொண்டாடப்படும். தேர்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள ஒரு வாரம் தேவைப்படும் பட்சத்தில், டிசம்பர் முதல் வாரத்தில் மட்டுமே தேர்வை நடத்த முடியும். 2021 ஆம் ஆண்டில் தான் முடிவுகள் அறிவிக்கப்படும்.  இது, மாணவர்கள்  தங்கள் முழு கல்வியாண்டை இழக்க வழி வகுக்கும்”என்று கூறினார்.

 

 

இரண்டாவதாக, நீட் தேர்வை தாமதிக்கும் முடிவு, நடப்பாண்டு மாணவர்களை மட்டுமல்லாமல்,எதிர்கால மாணவர்களையும் பாதிக்கும். 2020-21 ஆண்டு மாணவர்கள்  சேர்க்கை ஒரு வருடம் தாமதமாகிவிட்டால், 2021-22 ஆண்டில் நீங்கள் இரு மடங்கு இடங்களைப்  நிரப்ப முடியாது. எனவே, நவம்பர் மாதத்திற்குள் படிப்பைத் தொடங்க விரும்புகிறோம். குறைவான விடுமுறை நாட்கள், பாடத்திட்ட குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் செமஸ்டர்களை குறுகிய காலத்தில் முடித்து விட்டால், 2021ம்  ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய மாணவர் சேர்க்கைக்கு தயாராகி விடலாம்,”என்று கூறினார்.

கடந்த வாரத்தில்,பல மாநிலமுதல்வர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஜே.இ.இ (முதன்மை) மற்றும்   நீட்  தேர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை ஆதரித்தனர்.

செவ்வாயன்று, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்,  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதினர்.

புதன்கிழமை, தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு  எழுதிய கடிதத்தில், ” நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவச் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்யவேண்டும். மாணவர்களின் 12-ம் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

நீட் தேர்வை நடத்துவது மூலம்  மத்திய அரசு  மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த உயர்கல்வி செயலாளர், “முதலில், இத்தகைய வாதங்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன . அனைத்தையும் விசாரித்த நீதிமன்றம், மனுவை  இறுதியில் தள்ளுபடி செய்தது. சிலர்,  மாணவர்களின் உடல்நல ஆரோக்கியம், பாதுகாப்பு  குறித்து வாதிட்டாலும், மற்ற மாணவர்கள் தங்கள் எதிர்கால முன்னேற்றத்தை ஏன் தள்ளி போட வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். தங்கள் வாழ்க்கையில் ஒரு வருடத்தை ஒதுக்கி இந்த தேர்வுக்காக தயாராகி வருகின்றனர். அவர்களின் நிலை என்ன? இருதரப்பு கோரிக்கைகளையும்  சமநிலைப்படுத்த வேண்டும். அனைத்திற்கும் மேலாக, கல்வி ஆண்டு  அட்டவணையை கருத்தில் கொள்ளுங்கள்,” என்றார்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்கள் குறித்து கூறுகையில்,“எங்களுக்கு அவர்களின் ஒத்துழைப்பு தேவை. நாங்கள் ஏற்கனவே அனைத்து தலைமைச் செயலாளர்களிடமும் பேசியுள்ளோம். தேசிய சோதனை முகமையின் இயக்குனர்  ஜெனரல் மாநில பிரதிநிதிகளுடன் பல கூட்டங்களை நடத்தியுள்ளார். பெரும்பாலும், செப்டம்பரில் நீட் தேர்வு  நடைபெறும் என்று நான் நம்புகிறேன், ” என்று தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு மண்டலங்கள் பகுதிக்குள் வரும் தேர்வு மையங்களுக்கான மாற்று ஏற்பாடுகளை  என்.டி.ஏ செய்து வருகிறது  என்று செயலாளர் கூறினார். கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள் தங்கள் அனுமதி அட்டைகளை இ- பாஸாக  பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.