செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

யூ.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள்: உரிய நீதி வழங்கப்பட வேண்டும்! - மு.க.ஸ்டாலின்

 இந்திய குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் பற்றி வெளிப்படையான ஆய்வு நடத்தி நேர்ந்திருக்கும் தவறுகளை களைந்து நீதி வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியின் கீழ் இடஒதுக்கீடு உரிமை பெற்ற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய குடிமை பணிகள் தேர்வில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேர்காணல் கட்ஆப் மதிப்பெண்களிலும் வெளிப்படைத்தன்மை இல்லையோ என்ற சந்தேகம் மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ள இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மொத்தமுள்ள 927 பணியிடங்களில் 829 பேருக்கு மட்டும் அறிவிப்புகள் வெளியான நிலையில், ரிசர்வ் பட்டியலில் உள்ள 98 பேரின் பெயர்களை அறிவிக்காமல் இருட்டடிப்பு செய்தது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

வங்கி தேர்வுகள் தொடங்கி தற்போது அகில இந்திய குடிமைப் பணிக்கான தேர்வுகள் வரை 10% இடஒதுக்கீடு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்ற சந்தேகம் மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ள 'கட் ஆப்' மதிப்பெண்களில் உறுதியாகி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி உடனடியாக இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் விரிவான ஆலோசனை செய்து - இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியின சமுதாயங்களின் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டி நியாயம் வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்

சமூகநீதி உரிமையை இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ளது என்பதை நினைவில் கொண்டு, 2019-ம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் பற்றி வெளிப்படையான ஆய்வை நடத்தி, நேர்ந்திருக்கும் தவறுகளைக் களைந்து, நீதி வழங்கிட வேண்டும் என்றும்  ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.