தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க. தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவை விமர்சித்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
சொந்தக் கட்சிக்கு ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்குவதை விடுத்து, திமுகவை தேவையின்றி சீண்டியிருப்பதாக விமர்சித்துள்ளார். உண்மைகளை உரக்கச் சொல்லி, உரிமைகளை வலியுறுத்தினால் அவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தும் மலிவான போக்கை பா.ஜ.க கடைப்பிடித்து வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசின் யோகா பயிற்சி குறித்த கூட்டத்தில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என விரட்டுவது, இந்தி-சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பது என தமிழ்நாட்டின் பண்பாட்டுக்கு எதிராகச் செயல்படும் கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது எனவும் விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கின்ற கட்சியாக பாரதீய ஜனதா கட்சிதான் இருக்கிறது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஆள்பிடிக்கும் அரசியலைத் தமிழ்நாட்டிலும் நடத்த முயற்சிக்கும் பாஜகதான், தமிழகத்தின் பண்பாட்டிற்கும், தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும், அரசியல் சட்டத்திற்கும் ஒரே எதிரியாகத் திகழ்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.