தமிழகத்தில் நீட் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட நடப்பு கல்வியாண்டில் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் நீட் தேர்வை எழுத 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 714 மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய நிலையில், நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்களே நீட் தேர்வை எழுத பதிவு செய்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 16 ஆயிரத்து 724 பேர் குறைவாக தேர்வு எழுத பதிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வு மையங்களின் எண்ணிக்கையை தேசிய தேர்வு முகமை அதிகரித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 188-ல் இருந்து 238 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்றும், ஒரு அறையில் 24 மாணவர்களுக்கு பதில் 12 மாணவர்களே அமர வைக்கப்படுவார்கள் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதேபோல் நாடு முழுவதும் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ள JEE Main தேர்வை 660 மையங்களில் 9 லட்சத்து 53 ஆயிரத்து 473 பேர் எழுத உள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 34 மையங்களில் 53 ஆயிரத்து 765 பேர் எழுத உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.