தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும். ஆலை திறப்பு தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, 2018-ம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் பேரணியாக சென்றபோது துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த பிரச்னைக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடத்த ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆணையம் 19 கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளது.
அதே நேரத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.