சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் , பென்னிக்ஸ் கொலை வழக்கில், இதுவரை 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளதாகக் கூறியுள்ளனர்.
தங்களுக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவோம் என்றும் அந்த மனுவில் காவலர்கள் இருவரும் தெரிவித்திருந்தனர். இந்த மனு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ்க்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25 தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.