சனி, 22 ஆகஸ்ட், 2020

விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதில் நாட்டின் முன்னோடி கேரளா

 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுவதை கேரளா எதிர்க்கிறது என்றால் எதற்காக ஏலத்தில் கலந்துகொள்ள வேண்டும் என மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி கேள்வி எழுப்பியுள்ளார். 

 

நாடுமுழுவதும் விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை கவனிக்கும் பணியில் தனியாரையும் இணைத்துக் கொள்ள மத்திய அரசி முடிவு செய்தது. அதன்படி திருவனந்தபுரம், கவுகாத்தி, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர் விமான நிலையங்களின் அன்றாட பணிகள் மற்றும் பராமரிப்பு முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்றன. இதற்காக நடைபெற்ற ஏலத்தில் 6 விமான நிலையங்களில் 5 விமான நிலையங்களை சாதகமான தொகையை அதானி நிறுவனம் கோரியுள்ளது. இதன் மூலம் 5 விமான நிலையங்கள் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

 

இதனிடையே திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்க எதிப்பு தெரிவித்துள்ள கேரள அரசு திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க முடியாது. எனவே இந்த முடிவை திரும்பப் பெறவேண்டும் என தெரிவித்திருந்தது. 

 

இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டரில் தெரிவித்துள்ள மத்திய விமானபோக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி, விமான நிலையங்களை தனியார்மயப்படுத்துவதில் கேரளா தான் இந்தியாவின் முன்னோடியாக உள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது 1994 ஆம் ஆண்டில் நாட்டிலேயே முதலாவதாக தனியார்மயமாக்கப்பட்டது கொச்சி விமானநிலையம். மற்றொன்று கண்ணூர் விமான நிலையம் என தெரிவித்தார். 

 

தனியார் - பொது (PPP) பங்களிப்புடன் 2 விமான நிலையங்களை வெற்றிகரமாக நடத்திவரும் கேரளா, தற்போது திருவனந்தபுரம் விமானநிலையத்தின் நிர்வாகத்தை ஒப்படைக்க மறுப்பதாக அறிகிறேன். அவ்வாறு விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுவதை கேரளா எதிர்க்கிறது என்றால் எதற்காக ஏலத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். 

 

இந்தியாவின் 33% விமான பயணிகள் போக்குவரத்தை கையாளும் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் 2006-07 ஆம் ஆண்டில் தனியார் - பொது (PPP) பங்களிப்புடன் காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தனியார்மயமாக்கப்பட்டது. தற்போது தனியார்மயமாக்கப்படும் 6 விமான நிலையங்களின் ஒட்டுமொத்த பயணிகளை கையாளும் அளவு என்பது 10%க்கும் குறைவானதே என அவர் தெரிவித்துள்ளார்.