வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ

 அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுவதோடு, 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வெயில் வாட்டி வதைக்கிறது.. கொரோனா ஒருபக்கம் மிரட்ட, மறுபக்கம் காட்டுத்தீ, வாட்டி வதைக்கும் வெயில் என கதறுகிறது கலிஃபோர்னியா. 

இந்த புகைப்படம் எப்போதும் எடுக்கப்படும் சாதாரண செல்ஃபி அல்ல... அந்த புகைப்படத்தில் உள்ள செய்திதான், பலரை கதிகலங்க வைத்துள்ளது.. 55 டிகிரி செல்சியஸ்.. அதாவது 131 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை தாங்கியுள்ளது கலிஃபோர்னியாவின் DEATH VALLEY நகரம்.. பாலைவனத்தில் கூட இவ்வளவு வெப்பம் பதிவாகுமா என்பது கேள்விக்குறி தான்.


DEATH VALLEY- யில் ஆகஸ்ட் 17ஆம் தேதி 55 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி பலரை கலங்க வைத்துள்ளது. இதோடு, பல வானிலை ஆராய்ச்சியாளர்களின் பார்வையையும், தனது பக்கம் இழுத்துள்ளது DEATH VALLEY... காரணம் இந்த நூற்றாண்டில் பூமியில் எந்த ஒரு பகுதியிலும் இவ்வளவு அதிகமான வெப்பம் பதிவாகவில்லை என்பது, அங்கு உள்ளவர்களை கதிகலங்க வைக்கிறது.


55 டிகிரி செல்சியஸ் DEATH VALLEY பகுதிக்கு புதிதல்ல, 1913ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 56 புள்ளி 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் அங்கு பதிவானது... 100 ஆண்டுகளுக்கு பிறகு 55 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது ஒருபுறம் இருக்க, இந்த மாதம் முழுவதும் அங்கு வெப்பம் அதிகமாகதான் இருக்கும் எனவும் கூறுகிறது அங்குள்ள வானிலை ஆராய்ச்சி மையம்.


ஒருபக்கம் உச்சபட்ச வெப்பநிலை.. மறுபுறம் வறண்ட வானிலையால் பல பகுதிகளில் நேரிட்ட பயங்கர காட்டுத்தீ கலிஃபோர்னியாவை திணறடித்துள்ளது. அங்கு காட்டுத்தீ என்பது சகஜசமான செய்தி என கூறி கடந்து சென்றாலும், அது ஏற்படுத்தும் சேதமும், ஜீவராசிகள்  படும் சிரமம் சொற்களால் விவரிக்க முடியாது. இதுவரை 220 சதுர மைல் தூரத்திற்கு காட்டுத்தீ பரவியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்களை இருப்பிடத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

 


இதன் தீவிரத்தை உணர்ந்து கலிஃபோர்னியா கவர்னர் பேரிடரை அறிவித்திருக்கும் நிலையில், காட்டுத்தீயில் தீவிரத்தை குறைக்க மீட்பு படையினர் இரவு பகல் பாராது போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் எதிர்பாராத விதமாக, மீட்பு வாகனம் விபத்துக்குள்ளாகி ஒரு வீரரையும் அந்த நகரம் இழந்துள்ளது. 

கடந்த வருடம் காட்டுத்தீ நேரிட்ட சமயத்தில் மழையும் பெய்ததால், பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை உச்சபட்ச வெப்பம் பதிவாகியுள்ளதால், கட்டுகடங்காத காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது கலிஃபோர்னியா.