வெள்ளி, 1 ஜூன், 2018

வயதாவதை தடுக்கும் ​இந்தியாவின் முதல் மையம் டெல்லியில் தொடக்கம்! May 31, 2018

Image

இந்தியாவில் முதல் முறையாக இளமையுடன் வாழ ஆசைப்படுவோர்களுக்கான வயதாவதை தடுக்கும் மையம்  தொடங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள குஜ்ஜார்மால் மோடி ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையில் வயதாவதை தடுக்கும் மையம் நாட்டிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. 

உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் வயதாகும் பிரச்சனையை சரிசெய்ய அதற்கு எதிர்வினையாற்றும் மருத்துவத்தை இந்த மையம் அளிக்க உள்ளது. 

நவீன கால வாழ்க்கைமுறையால் ஏற்படும் சர்க்கரை நோய், இதய நோய்கள், ஹார்மோன் சமநிலையின்மை, மாதவிடாய், உடல்பருமன், அல்சைமர் உள்ளிட்ட மிக முக்கியமான 140 நோய்கள் இந்த மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சையால் குணப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இம்மையத்தின் தலைவர் பிரீத்தி மல்கோத்ரா கூறும்போது, இந்தியாவில் உள்ள சுகாதார சேவைகள் துறையின் அடித்தளத்தையே முழுவதுமாக மாற்றவேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த கருத்துருவை இந்தியாவிற்கு கொண்டுவர நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

இம்மையத்தில் பணியாற்றவிருக்கும் வயதாவதை தடுக்கும் மருத்துவத்தில் உலகின் தலைசிறந்த மருத்துவரான Graham simpson கூறும்போது, நகரமயமாக்கல் காரணமாக மனிதர்களின் வாழ்க்கை, உணவு முறை அடியோடு மாற்றம் அடைந்திருக்கிறது, இதன் காரணமாக பல்வேறு நோய் தாக்குதலுக்கு நாம் ஆளாகியுள்ளோம், இந்த நோய்களுக்கு இம்மையத்தில் குறைந்த மற்றும் நீண்ட கால என இரண்டு வழிகளில் நிவாரணம் கிடைக்கும், உதாரணத்திற்கு சர்க்கரை நோய் இரண்டு மாத காலத்தில் குணப்படுத்தலாம் என்று குறிப்பிட்டார்.

மேலும், இங்கு நோய்க்கான மூல காரணத்தை ரத்தப் பரிசோதனை செய்யாமலே கண்டறிந்துவிடலாம் என்றும் அவர் கூறி வியக்க வைக்கிறார்.

இதுமட்டுமல்லாமல், இங்கு முக அழகு சிகிச்சைகள் அனைத்தும் பிளாஸ்டிக் சர்ஜரி இல்லாமல் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று கூறுகின்றனர்.

மருத்துவத்துறையில் பல வியத்தகு சிகிச்சைகளை அளிக்க உள்ளதாகவும் இம்மையத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.