கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கிடையே நிதி அமைச்சகத்தை மையமாக வைத்து போட்டாபோட்டி ஏற்பட்டுள்ளதால் அமைச்சரவை விரிவாக்கம் செய்வதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
கர்நாடக முதல்வராக ம.ஜ.த கட்சியின் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வராவும் பதவியேற்று ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தில் இருகட்சிகளுக்குமிடையே ஒருமித்த முடிவு ஏற்படாததால், மேற்கொண்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இருகட்சிகளுமே நிதித்துறையை கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளதால் எந்த இறுதிமுடிவும் எட்டப்படாமலே நாட்கள் நகர்ந்து வருகின்றன.
பொதுவாகவே கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படும்போதெல்லாம் முதல்வர் பதவி வகிப்பவருக்கு நிதித்துறை அளிக்கப்படுவதில்லை. கூட்டணி கட்சிகளுக்கிடையே சமநிலை இருக்க வேண்டும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
இருப்பினும், நிதித்துறையை கைப்பற்றுவதில் குமாரசாமி உறுதியாக இருக்கிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் ம.ஜ.த கூட்டணி ஆட்சி அமைத்த போது பின்பற்றப்பட்டுவந்த நடைமுறையை நினைவுபடுத்தி தங்களுக்கு நிதித்துறையை தருமாறு கோரிக்கை வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
தற்போதைய கூட்டணி வேறு சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளதால் பழைய நடைமுறை இந்த சூழலுக்கு ஏற்றதாக இருக்காது என்று குமாரசாமி காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இருகட்சிகளுக்குமிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் நிதியமைச்சகத்தை கைப்பற்றுவதற்கு போட்டாபோட்டி ஏற்பட்டுள்ளதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது விவசாயிகள் கடன் தள்ளுபடி விவகாரம் தான்.
மூன்று நாட்களுக்கு முதல்வர் பதவி வகித்த பாஜகவின் எடியூரப்பா விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பதவியேற்ற நாளன்று கையெழுத்திட்டார். இந்த விவகாரத்தை அமல்படுத்துவதை மானப்பிரச்சனையாக குமாரசாமி கருதுவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி நிதியமைச்சகத்தை கைப்பற்றினால் 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிடலாம், அதன் மூலம் தங்கள் கட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று கருதுவதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ, நிதித்துறையை மையமாக வைத்து இருகட்சிகளுக்குமிடையே நீடித்து வரும் பிரச்சனை இன்று மாலைக்குள் முடிவுக்கு வரும் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூற்றாகும்.
இதனிடையே, அரசு அமைக்கும் விவகாரத்தில் குழப்பம் நீடித்து வருவதை சுட்டிக்காட்டி காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணியை விமர்சித்துள்ள பாஜக, இந்த விவகாரத்தால் மக்கள் தான் பாதிப்படைந்துள்ளதாகவும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சரிசெய்யாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.