தமிழகத்தில் 14 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், டெல்லியில் அண்மையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த 2 பேர் உட்பட 16 பேர், எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த முகம்மது ஷேக் மைதீன், தேனியை சேர்ந்த முகம்மது அக்சர், திருநெல்வேலியை சேர்ந்த இப்ராகிம் ஆகிய 14 பேரின் வீடுகளில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுரையில் முகம்மது ஷேக் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அகம்மது அசாருதீன் வீட்டில் காலை முதலே, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த செல்போன், சிம்கார்டுகள், குறுந்தகடுகள், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம் கோம்பையை சேர்ந்த மீரான் கனி, முகம்மது அப்சல் ஆகியோரது வீடுகளில், 6 மணி நேரத்துக்கும் மேலாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், லேப்டாப், கிரெடிட் கார்டு ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பகுதியை சேர்ந்த குலாம்நபி ஆசாத் வீட்டில் சோதனை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், குடும்பத்தினிடம் விசாரணை நடத்தினர். எனினும் சோதனையின் போது, ஆவணங்கள் ஏதும் சிக்காததால் திரும்பி சென்றனர். தமிழகத்தில் மொத்தம் 14 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், லேப்டாப், 7 செல்போன்கள், மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
credit ns7.tv