அயோத்தி வழக்கில் ஜூலை 31-ம் தேதி வரை பேச்சுவார்த்தை நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அயோத்தி விவகாரத்தில் தீர்வு காண உச்சநீதிமன்றம் சார்பில் சமரச குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு அயோத்தி நிலவிவகாரம் குறித்து பிரச்சனைக்குரியவர்களிடம் பேசி சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடபட்டுள்ளது. மேலும் இந்த சமரச குழு தமது அறிக்கையை வரும் ஆகஸ்ட் 15-க்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் சமரச குழுவினால் எந்த பயனும் இல்லை என்றும், இதனை கலைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சமரச குழுவின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து சமரச குழுவின் இடைக்கால அறிக்கை இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை ரகசியமாக வைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், ஜூலை 31-ம் தேதி வரை சமரச குழு பேச்சுவார்த்தை நடத்தலாம் என அனுமதி வழங்கியுள்ளது
credit ns7.tv