credit ns7.tv
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சமாஜ்வாதி கட்சியின் ராஜ்யசபா எம்.பி ஒருவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததையடுத்து மேலும் இரண்டு எம்.பிக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான தகவல் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் எதிர்கட்சி முகாம்களில் இருந்த பல தலைவர்களும், எம்.பி, எம்.எல்.ஏக்களும் பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர். கர்நாடகா, கோவா மாநிலங்கள் பெரிய அளவிலான அணி மாற்றத்தை சந்தித்துள்ள நிலையில் நாட்டின் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்திலும் அணி மாறும் படலம் அரங்கேறிவருகிறது.
அகிலேஷ் யாதவின் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரான நீரஜ் சேகர் கடந்த திங்களன்று தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் இவர் பாஜகவில் இணைந்தார்.
இந்திய முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் மகனான நீரஜ் சேகர் 2014 முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் நவம்பர் 25, 2020 வரை இருக்கும் நிலையில் தற்போது இவர் ராஜினாமா செய்துள்ளதால் அந்த இடத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும், இதில் மாநிலத்தில் அதிக பெரும்பான்மை கொண்டிருக்கும் பாஜகவால் வெகு எளிதாக வெல்ல முடியும். ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் இல்லாமல் உள்ள பாஜக தற்போது பெரும்பான்மையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நீரஜ் சேகரை தொடர்ந்து மேலும் இரண்டு எம்.பிக்கள் அடுத்த சில தினங்களில் தங்களது ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களும் பாஜகவில் இணையலாம் என்றே கருதப்படுகிறது. தேர்தலில் தோல்வி கண்ட அதிர்ச்சியில் இருந்து விலகாத அகிலேஷ் யாதவிற்கு எம்.பிக்கள் விலகல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.