ஞாயிறு, 21 ஜூலை, 2019

பெண்குழந்தைகளை விரும்பவில்லையா தமிழகம்? July 21, 2019

பெண் சிசு பிறப்பு குறித்து எத்தனை விழிப்புணர்வு, திரைப்படங்கள் எல்லாம் வந்தாலும் தமிழகத்தில் பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
நாடு முழுவதும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்த விவரங்களை தேசிய தலைமைப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் ஆண்குழந்தைகளுக்கு நிகராக இருக்கும் பெண் குழந்தைகளின் விகிதம் கடந்த 10 ஆண்டுகளில்  கிட்டத்தட்ட 10% குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
2010ம் ஆண்டு வரை பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் தென் மாநிலங்கள் தான் முன்னிலை வகித்தன.  உதாரணமாக,  2007-ஆம் ஆண்டு தேசிய அளவில் 1000 ஆண்குழந்தைகளுக்கு  903 பெண் குழந்தைகள் இருந்தனர். ஆனால்,  தமிழகத்தில் 1000 ஆண்குழந்தைகளுக்கு 935 பெண் குழந்தைகள் இருந்தனர். 2010-ஆம் ஆண்டில் தேசியஅளவில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை 903ல் இருந்து 857 ஆக குறைந்த நிலையில், தமிழகத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 935 என்ற அளவிலேயே நீடித்தது. 
ஆனால், 2016ம் ஆண்டில் தேசிய சராசரி 877 ஆக அதிகரித்த நிலையில், தமிழகத்தில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை 840 ஆக குறைந்து விட்டது. 
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் : 
2007 :
தேசிய அளவில் 1000 ஆண்களுக்கு  903பெண்கள்
தமிழக அளவில் 1000 ஆண்களுக்கு  935 பெண்கள்
2010 :
தேசிய அளவில் 1000 ஆண்களுக்கு  857பெண்கள்
தமிழக அளவில் 1000 ஆண்களுக்கு  935 பெண்கள்
2016 :
தேசிய அளவில் 1000 ஆண்களுக்கு  877பெண்கள்
தமிழக அளவில் 1000 ஆண்களுக்கு  840 பெண்கள் 
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கேரளத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும்  பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்திருப்பதும் இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததற்கு, பெண்குழந்தைகளை கருவிலேயே அழிப்பது மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நகரங்களை விட கிராமங்களில் தான் இந்த கருக்கலைப்பு  அதிகளவு நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சமீபத்தில் ஸ்கேன் சென்டர்களில் நடத்தப்பட்ட ரெய்டில் 18 வயது முதல் 25 வயது வரையிலான பெண்கள் அதிகளவு கருக்கலைப்பு செய்துகொள்வது தெரியவந்துள்ளது. அதேசமயத்தில் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் கருக்கலைப்பு நிகழ்வுகள் நடக்கின்றன. மறுபுறம், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மாறுதலுக்குட்பட்டது. எனவே, அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறும் என்று கூறுகின்றனர் சுகாதார ஆய்வாளர்கள். 
அவர்கள் கூற்றுப்படி அடுத்த 10 ஆண்டுகளில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை உயருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்தாலும், தற்போது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செயற்கை முறை கருத்தரிப்பின் போது ஆண் குழந்தைகளை உருவாக்குவது, மரபணு ஆய்வின் மூலம் குழந்தைகளின் பாலினத்தைக் கண்டறிவது ஆகியவை மக்கள் மத்தியில் பரவி வருகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவதற்கு இந்த நவீன மருத்துவ வளர்ச்சியும் தற்போது காரணமாகி வருகின்றன.  மேலும்  தேசிய அளவில் ஆண், பெண் குழந்தைகளில் 30 ல் ஒரு குழந்தை ஒரு வருடத்திற்குள் இறக்கிறது.  கிராமப்புறங்களில்  ஒவ்வொரு 27 குழந்தைகளில் ஒரு குழந்தையும், நகர்ப்புறங்களில்  43  குழந்தைகளில் ஒரு குழந்தையும்  ஒரு வருடத்திற்குள் இறக்கின்றனர் என்ற தகவலும் அந்த புள்ளிவிபரங்களின் வாயிலாக வெளியாகியுள்ளது.

credit ns7.tv