தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இதுவரை அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த எட்டாம் தேதி தொடங்கிய நிலையில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டன. இதில் அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சியைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவிக்கு மட்டுமே சுயநிதி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த எட்டு பேருக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைத்துள்ள நிலையில், இந்த ஆண்டு பல மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் எத்தனை இடங்கள் கிடைத்துள்ளன என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என கல்வியாளர்களும், பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு சார்பில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளதா? என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.
credit ns7,tv